இலங்கை தமிழர்கள் குடியிருப்பைத் திறந்துவைத்தார் முதல்வர்

திண்டுக்கலில் கட்டப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் குடியிருப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இலங்கை தமிழர்கள் குடியிருப்பைத் திறந்துவைத்தார் முதல்வர்
Published on
Updated on
2 min read

திண்டுக்கலில் கட்டப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் குடியிருப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று (14.9.2022) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, திண்டுக்கல் மாவட்டம், தோட்டனூத்து ஊராட்சியில், தோட்டனூத்து, அடியனூத்து மற்றும் கோபால்பட்டி முகாம்களை ஒருங்கிணைத்து 17 கோடியே 84 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 321 புதிய வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் நலன் காக்க 27.8.2021 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், “கடந்த சில ஆண்டுகளாக முறையான அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்துவரக்கூடிய முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு, பாதுகாப்பான, கௌரவமான, மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்துத் தருவதை இந்த அரசு உறுதிசெய்யும் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இதற்காக, அவர்கள் தங்கியிருக்கும் முகாம்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அந்த ஆய்வுகளின் அடிப்படையில், இலங்கைத் தமிழர்களது முகாம்களில், மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகள் புதிதாகக் கட்டித்தரப்படும்” என்று முதலமைச்சர் அறிவித்தார்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் உள்ள தோட்டனூத்து, அடியனூத்து மற்றும் கோபால்பட்டி முகாம்களை ஒருங்கிணைத்து 321 புதிய வீடுகளுடன் கூடிய புதிய முகாமினை அமைக்க ஏதுவாக தோட்டனூத்து கிராமத்தில் 3.05 ஹெக்டேர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான நிதியும் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, தோட்டனூத்து ஊராட்சியில் புதிதாக ஒருங்கிணைந்த இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்கப்பட்டு 15 கோடியே 88 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் ஒவ்வொரு குடியிருப்பும் தலா 300 சதுரஅடி பரப்பளவில் 321 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.

மேலும், இம்முகாமில் 1 கோடியே 62 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாய் செலவில் அங்கன்வாடி மையம், தார்சாலை, சிமெண்ட் சாலை, ஆழ்குழாய், மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி, புதிய மின் கம்பங்கள், 78 தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், 33 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குளியலறைகள் மற்றும் புதிய ஆழ்குழாய் கிணறு ஆகியன அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம், தோட்டனுாத்து ஊராட்சியில் ”ஒருங்கிணைந்த இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாம்” தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் 321 வீடுகள் மற்றும் இதர அடிப்படை வசதிப் பணிகள் எட்டு மாதங்களில் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து கூட்டுறவுத் துறை அமைச்சர் இ. பெரியசாமி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, சிறுபான்மையினர் நலன் மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், முகாம் அலுவலகத்திலிருந்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பொதுத்துறை செயலாளர் டி. ஜகந்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com