
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையை காவல் துறையினர் அகற்றியதைக் கண்டித்து திங்கள்கிழமை பாரதீய ஜனதா கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே பாரதீய ஜனதா கட்சி சார்பில் சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தரும் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பதாகையை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு காவல் துறையினர் அகற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விட்டனர்.
இது குறித்து தகவல் தெரிந்த பாரதீய ஜனதா கட்சியினர் திங்கள்கிழமை காலை மானாமதுரை சோணையா சுவாமி கோயில் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனங்களில் அணிவகுத்து மானாமதுரை காவல் நிலையத்திற்கு வந்தனர். அங்கு பதாகையை காவல் துறையினர் அகற்றியதைக் கண்டித்து அவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அதன் பின்னர் காவல் ஆய்வாளர் முத்து கணேஷ் , சார்பு முருகானந்தம் ஆகியோரிடம் தங்களது கட்சி சார்பில் வைக்கப்பட்ட பதாகை அகற்றியதைக் கண்டித்து வாக்குவாதம் செய்தனர். இதற்கிடையில் பாஜகவினர் சிலர் காவல் துறையினரைக் கண்டித்து காவல் நிலையத்திற்கு எதிரே சாலையில் உட்கார்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து நிர்வாகிகள் இவர்களை சமாதானம் செய்து மீண்டும் காவல் நிலையத்திற்கு கூட்டிவந்து காவல் துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் அனுமதி பெற்று பதாகையை வைத்துக் கொள்ளுமாறு காவல் துறையினர் கூறினர்.
இதையும் படிக்க: பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை!
மேலும் அகற்றிய பதாகையையும் கட்சியினரிடம் ஒப்படைத்தனர். இப்போராட்டத்தில் பாரதீய கட்சி நகர்த் தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான நமகோடி என்ற முனியசாமி, மாவட்ட துணைத் தலைவர் சுரேஷ், ஒன்றியத் தலைவர்கள் சுப.ரவிச்சந்திரன், முத்துப்பாண்டி, மாவட்டச் செயலாளர் சங்கர சுப்பிரமணியன், மாவட்டப் பொறுப்பாளர் பாண்டி, நகரச் செயலாளர் பூமணத்தமிழன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.