லட்சக்கணக்கான முதியோரின் ஓய்வூதியம் நிறுத்தம்: ஓபிஎஸ் கண்டனம்

லட்சக்கணக்கான முதியோர்களின் ஓய்வூதியத்தை அரசு நிறுத்தியுள்ளது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
லட்சக்கணக்கான முதியோரின் ஓய்வூதியம் நிறுத்தம்: ஓபிஎஸ் கண்டனம்
Published on
Updated on
2 min read

ஆதார் எண் அடிப்படையில் சமையல் எரிவாயு உருளை, நகைக் கடன் போன்ற விபரங்களை முதியோர் ஓய்வூதியம் பெறுவோரின் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்த்து அளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், லட்சக்கணக்கான முதியோர்களின் ஓய்வூதியத்தை அரசு நிறுத்தியுள்ளது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித் தொகை ரூ. 1,500 ஆக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் சமயத்தில் அள்ளி வீசிய திமுக, ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் கடந்த நிலையில், இந்த வாக்குறுதியை நிறைவேற்றாததோடு மட்டுமல்லாமல், பயனாளிகளின் எண்ணிக்கையை லட்சக்கணக்கில் குறைத்துள்ளதாக செய்தி வந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, "கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது" என்ற பழமொழி தான் பொதுமக்களின் நினைவிற்கு வருகின்றது. இது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சமர்ப்பிக்கப்பட்ட 2021-2022-ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையிலேயே முதியோர் ஓய்வூதியத் தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்படும் என்று பயனாளிகள் எதிர்பார்த்த நிலையில், நிதிநிலை அறிக்கை பத்தி 32-இல், "முதியோர் ஓய்வூதியத் திட்டம் முழுமையாக சீரமைக்கப்பட்டு அனைத்துத் தகுதி வாய்ந்த நபர்களும் விடுதலின்றி பயன் பெறுவதை இந்த அரசு உறுதி செய்யும்" என்றுதான் குறிப்பிடப்பட்டு இருந்தது. முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களும், இன்னும் லட்சக்கணக்கான நபர்களை சேர்த்தபிறகு ஓய்வூதியத்தை ரூ.1,500 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டு இருக்கிறது என்று நினைத்து, இதற்கான அறிவிப்பு 2022-2023-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இடம் பெறும் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், அதிலும் ஏமாற்றம் தான் மிச்சம்.

இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்த பயனாளிகளில் 1 லட்சத்து 82 ஆயிரம் முதியோருக்கான ஓய்வூதியத்தை திமுக அரசு ரத்து செய்துள்ளதாக வந்துள்ள செய்தி ஏழை, எளிய வருவாய் இல்லாத முதியோரை கடும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. "விடுதலின்றி பயன் பெறுவது" என்பதற்குப் பதிலாக "இருப்பவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்" என்ற பரிதாபகரமான நிலைதான் தற்போது நிலவுகிறது.

இதுகுறித்து, அரசு அதிகாரிகள் கூறுகையில், முதியோர் ஓய்வூதியம் பெறுவோரின் ஆதார் எண் அடிப்படையில் எரிவாயு உருளை, நகைக் கடன் போன்ற விபரங்களை முதியோர் ஓய்வூதியம் பெறுவோரின் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்த்து அளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், லட்சக்கணக்கான முதியோர்களின் ஓய்வூதியத்தை அரசு நிறுத்தியுள்ளது எனத் தெரிவிக்கின்றனர்.

சட்டத்திற்கு முரணாக ஓய்வூதியத் தொகை பெறுபவரை நீக்குவதில் யாருக்கும், எவ்விதமான மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது. அதே சமயத்தில் அரசின் செலவினத்தைக் குறைக்க வேண்டுமென்ற நோக்கத்தில், சில நிபந்தனைகளை விதித்து, அதன் அடிப்படையில் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்தால் அது இயற்கை நியதிக்கு புறம்பானது.

பொதுவாக, முதியோர் ஓய்வூதியம் என்பது அரசு அதிகாரிகளால் கள ஆய்வு மேற்கொண்ட பிறகு, அவர்களுடைய வருமானம், வறுமை நிலை ஆகியவற்றின் அடிப்படையில்தான் வழங்கப்படுகிறது. இவ்வாறிருக்க, முதியோர்களுக்கு இருக்கின்ற சொத்துக்களின் அடிப்படையிலோ அல்லது அவருடைய பிள்ளைகளுடைய வருமானத்தின் அடிப்படையிலோ அல்லது அவர்கள் வீடுகளில் உள்ள பொருள்களின் அடிப்படையிலோ ஓர் ஆய்வை மேற்கொண்டு அதன் அடிப்படையில் அவர்கள் வறுமை கோட்டிற்கு மேல் உள்ளார்கள் என்று தெரிவித்து அவர்களுக்கு கொடுக்கப்படும் முதியோர் ஓய்வூதியத்தை அரசு நிறுத்தினால் அது ஏற்கத்தக்கதல்ல.

இன்னும் சொல்லப்போனால், முதியோர் ஓய்வூதியம் கொடுக்கப்படுவதனால்தான், அவர்களது பிள்ளைகள் அவர்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற நிலையில், முதியோர்கள் பெறுகின்ற ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால், அவர்கள் எல்லாம் அனாதை இல்லங்களை நோக்கிச் செல்லக்கூடிய அவல நிலைமை ஏற்படும். ஒரு வேளை, இதுபோன்ற ‘மக்கள் விரோத மாடல்’ என்பதைத் தான் ‘திராவிட மாடல்’ என்று திமுக சொல்கிறது போலும். வயதான ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, முதியோர் ஓய்வூதியத் திட்டப் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டுமென்றும், தற்போது ஓய்வூதியம் பெறும் அனைத்துப் பயனாளிகளும் தொடர்ந்து முதியோர் ஓய்வூதியம் பெற வழிவகை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com