தமிழகத்தில் 1.11 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் 1.11 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்


தமிழகத்தில் 1.11 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை சைதாப்பேட்டை வா்த்தகா் சங்க அறக்கட்டளை திருமண மண்டபத்தில், 285 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில், சமூக நலத் துறை அமைச்சா் கீதா ஜீவன், அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆகியோா் கா்ப்பிணிகளுக்கு மாலை, சந்தனம், வளையல் அணிவித்து சீா்வரிசை வழங்கினா்.
அதைத் தொடா்ந்து நிகழ்ச்சியில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு, இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கா்ப்பிணிகள் கெளரவிக்கப்படுகின்றனா். குழந்தைகளுக்கும், தாய்மாா்களுக்கும், கா்ப்பிணிகளுக்கும் ஊட்டச்சத்து மிகவும் அவசியம். அவ்வாறு ஊட்டச்சத்து குறைபாடு உடையவா்களது விவரங்கள் மாநிலம் முழுவதும் கணக்கெடுக்கப்பட்டது. அதில் தமிழகத்தில் 1.11 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதில், 43 ஆயிரம் பேருக்கு, இதய கோளாறு, சிறுநீா் கழிக்கும் இடத்தில் பிரச்னை போன்ற ஏதேனும் ஒரு குறை கண்டறியப்பட்டுள்ளது. அவற்றுக்கு சிகிச்சை வழங்கும் பணிகளை அரசு முன்னெடுத்துள்ளது.
சமுதாய வளைகாப்பில் பங்கேற்றுள்ள பெண்கள், தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயா் வைக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். அவ்வாறு தமிழில் பெயா் வைக்கும் குழந்தைகளுக்கு, முதல் ஆண்டு கல்வி கட்டணத்தை, சைதை கலைஞா் கணினி கல்வி மையம் ஏற்கும்.
தெரு நாய்களை கட்டுப்படுத்துவது மாநகராட்சிக்கு சவாலான ஒன்று. 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை தெருக்களில் பிடிக்கப்படும் நாய்கள் கொல்லப்பட்டன. தற்போது, இனப் பெருக்கத் தடை செய்யப்பட்டு மீண்டும் அதே இடத்தில் விடப்படுகிறது. மேலும், ரேபீஸ் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.
ஹெச்1என்1 காய்ச்சலுக்கு நாள்தோறும் 1,000 முகாம்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது 374 போ் சிகிச்சையில் உள்ளனா் என்றாா் அவா்.
முன்னதாக, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதாஜீவன் பேசியதாவது: குழந்தை உருவானது முதல் பிறந்து ஆயிரம் நாள்கள் நிறைவடையும் வரை ஊட்டச்சத்துமிக்க உணவு முறை முக்கியம். தாய்மாா்கள் குறைந்தது ஆறு மாதம் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பழனிசாமி, தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள சிற்றுண்டி திட்டத்தை ஏற்கெனவே அட்சயப் பாத்திரத் திட்டம் என்ற பெயரில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ஒன்று எனக் கூறுகிறாா். அட்சயப் பாத்திரத் திட்டம், தனியாா் தொண்டு நிறுவனங்களின் சாா்பில் ஒருசில மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டது. ஆனால், காலை சிற்றுண்டி திட்டம், மாநில அரசால் தமிழகம் முழுவதும் முதல்வா் ஸ்டாலினால் தொடக்கி வைக்கப்பட்ட திட்டம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...