விராலிமலை அருகே குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
விராலிமலை அருகே குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

விராலிமலை அருகே குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பு

விராலிமலை அருகே உணவுப்பொருள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய நச்சுகழிவு நீரால் குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன.


உணவுப்பொருள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய நச்சுகழிவு நீரால் மீன்கள் செத்து மிதக்கின்றன. நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலத்தின் பாசனத்திற்கு, இந்த குளத்திலிருந்து நீர் பாய்வதால் பயிர்கள் நாசமாகும் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள் குளத்து நீரை அருந்தி உயிரிழக்கும் சூழல் ஏற்படும் முன் துரித நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள  வேலூரில் உள்ளது சின்ன குளம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தின் நீரால் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் அப்பகுதியில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு குடிநீராகவும் இந்த குளத்து நீர் பயன்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குளத்தருகே சென்று பார்த்தபோது குளத்தில் குவியல் குவியலாகக் கெண்டை, விரால், குரவை வகை மீன்களுடன் சேர்ந்து பாம்பும் செத்து மிதந்து உள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடன் ஊர் முக்கியஸ்தர்களிடம் இதுகுறித்து கூறியதைத் தொடர்ந்து அவர்களும் அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

குளத்தின் அருகே இயங்கி வரும் உணவுப் பொருள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் நச்சுக் கழிவு நீர் குளத்து நீரில் கலப்பதால் தான் மீன்கள் செத்து மிதப்பதாக கூறப்படுகிறது..தற்போது குளத்து நீர் விஷமாக மாறியுள்ளது என்றும், இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

விராலிமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் மீன்பிடி திருவிழா நடத்தி அப்பகுதியில் உள்ள குளங்களில் பொதுமக்கள் மீன்களைப் பிடித்து வரும் இச்சூழலில் ஒரு குளத்திலிருந்த மொத்த மீனுமே நச்சுக் கலந்த நீரால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com