உப்பு சத்தியாகிரக நினைவுப் பேரணி 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும்: ப.சிதம்பரம்

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக உப்பு சத்தியாகிரக நினைவுப் பேரணி அமையும் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.
திருச்சியில் உப்பு சத்தியாகிரக நினைவுப் பேரணியை தொடங்கி வைத்த காங்கிரஸ் தலைவர்கள்.
திருச்சியில் உப்பு சத்தியாகிரக நினைவுப் பேரணியை தொடங்கி வைத்த காங்கிரஸ் தலைவர்கள்.


திருச்சி: 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக உப்பு சத்தியாகிரக நினைவுப் பேரணி அமையும் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.

இந்திய சுதந்திரத்தின 75 ஆவது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கேட்டுக்கொண்டதன் பேரில், தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலுவை தலைவராகவும், துணைத்தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தியை ஒருங்கிணைப்பாளராகவும் கொண்டு தமிழகத்தில் விழாக்குழு அமைக்கப்பட்டது. 

இந்திய விடுதலைப் போராட்ட நிகழ்வுகள் தமிழகத்தில் எங்கெங்கு நடைபெற்றதோ அதை மீண்டும் நினைவுகூறுகிற வகையில் அந்தந்த இடங்களிலெல்லாம் சிறப்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய இக்குழு முடிவு செய்திருக்கிறது. 

கடந்த 1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தலைமையில் தண்டி யாத்திரை நடத்தப்பட்டு உப்பு எடுக்கிற போராட்டம் நடைபெற்றது. இதுவே இந்திய விடுதலையின் தொடக்கமாக இருந்தது. அதேபோல், அதே ஆண்டு 13.04.1930 அன்று தமிழகத்தில் மூதறிஞர் ராஜாஜி அவர்கள் தலைமையில் திருச்சியிலிருந்து நடைப்பயணம் மேற்கொண்டு வேதாரண்யத்தில் உப்பு எடுக்கிற சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. 

இந்தப் போராட்டங்கள் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்நிலையில், மூதறிஞர் ராஜாஜி தலைமையில் அன்று நடந்த வேதாரண்ய உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தை மீண்டும் நினைவுகூறுகிற வகையில், திருச்சி திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவு தூணில் இருந்து, வேதாரண்யம் நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. 

இதன்படி, இன்று புதன்கிழமை காலை திருச்சி ஜங்ஷன், திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தியாகி டி.எஸ்.எஸ்.ராஜன் அவர்களது இல்லத்திலிருந்து வேதாரண்ய உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை தொடங்கியது.

அதனை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கிவைத்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர்,கே.வீ.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்  உள்ளிட்டோர் சத்தியாகிரக பாத யாத்திரையை நினைவுபடுத்தி பேசினார்கள். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

பேரணி தொடங்கி வைத்து முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் பேசியது:
உப்பு சத்தியாகிரக நடைபயணத்தை பற்றி பலருக்கு தெரியாது. தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த நடைபயணம் அமையும்.
உப்பு என்பது ஒரு அடையாளம் தான். இன்றைக்கு அதற்கு இணையாக மொழி, உணவு, உடை, கலாச்சாரம் போன்றவை அடையாளமாக உள்ளன.

சுதந்திரம் பறிபோகும் போது இந்த உரிமைகளில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தலையிடுகிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் தருவதல்ல உரிமை. உரிமைகள் எது என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.

சுதந்திரம் நாள்தோறும் இந்த நாட்டில் பறிபோகிறது. இது நீடித்தால் கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய அனைத்து சுதந்திரங்களும் பறிபோய் விடும்.

பேச்சு, எழுத்து, கட்டுரை, சுட்டுரை இவையணைத்தும் ஆயுதங்கள். அந்த ஆயுதங்களை கையில் எந்த வேண்டும் என்று தான் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சொன்னார் என நம்புகிறேன் என்றார்.

கே.வீ.தங்கபாலு பேசுகையில், வேதாரணியம் உப்பு சத்திய கிரக போராட்டம், தென்னகத்தில் விடுதலை போராட்டம் பரவ காரணமாக இருந்தது. அன்றைக்கு வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அறவழிப் போராட்டத்தில் காங்கிரஸ் பேரியக்கம் ஈடுபட்டது. இன்று கொள்ளையர்களை எதிர்த்து வீழ்த்த,  அத்தகைய போராட்டம்  தற்போதும் தேவைப்படுகிறது.

இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்பட வேண்டும். அதனை தமிழ்நாட்டிலும் படிப்படியாக நிறைவேற்றி, திமுகவின் நல்லாட்சிக்கு, தமிழக முதல்வர் மேலும் பெருமை சேர்க்க வேண்டும்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், நீதிமன்றங்களில் வாதாட கூடாது, அந்நியத் துணிகள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம் என நாட்டின் விடுதலைக்கு தேவைப்பட்டது.

வெள்ளையர்களை விட கொடியவர்களாக மோடியையும், அமித்ஷாவையும் தூக்கி எறிவதற்கு இந்தகைய  நடைபயணம் அவசியம். வெள்ளைக்காரர்கள் நாகரிகமானவர்கள், அதனால் அவர்களை எதிர்த்து அகிம்சை வழியில் போராடினோம்.

காங்கிரஸ்காரர்கள் ஆயுதம் ஏந்த மாட்டார்கள். பாஜக ஆட்சி தொடர்ந்தால் மாநிலங்கள் தனித்தனி நாடுகளாக மாறும் அபாயம் உள்ளது. நாட்டில் உள்ள மொழி, உணவு, உடை வேறுபாடுகளை வைத்து பாஜக அரசு அரசியல் செய்கிறது.

இதில் பன்முகப்பட்ட பண்பாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனை எப்பாடுபட்டாவது தடுக்க வேண்டும். அதற்கு ஆயுதம் எடுக்க வேண்டும் என்று சொன்னாலும்,  அதனை எடுத்துத்தான் ஆகவேண்டும் என்றார்.

திருநாவுக்கரசர் பேசுகையில்,  காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பார். நேரு குடும்பம் இல்லாமல் காங்கிரஸ் கட்சி இல்லை.
மோடி, அமித்ஷாவை ஆட்சியிலிருந்து விரட்டுவதற்கு காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.

உங்களுக்கு வயதாகி விட்டால் உங்கள் மகனையோ, பேரனையோ காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக ஆக்குங்கள் என்றார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், காங்கிரஸ் கட்சி சிறந்த பொருளாதார கொள்கையை கையாண்டது.
காங்கிரஸ் ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருந்தது.

அடிமை இந்தியாவில் ஆங்கிலேயர்கள் உப்புக்கு வரி விதித்தார்கள். சுதந்திர இந்தியாவில் பா.ஜ.க ஆட்சியாளர்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீது ரூ.25 லட்சம் கோடி வரி விதித்துள்ளார்கள். அதனால் தான் மீண்டும் ஒரு சத்தியாகிரக போராட்டம் தேவைப்படுகிறது.

திருச்சி தியாகி டி.எஸ்.எஸ்.ராஜன் அவர்களது இல்லத்திலிருந்து தொடங்கிய வேதாரண்ய உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை.

ஆங்கிலம் இந்தியாவில் எவ்வளவு காலம் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்பதை இந்தி பேசாத மாநிலங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்பது தான் காங்கிரஸ் கட்சியின் மொழி கொள்கை. இந்தியாவில் இந்தி மொழி பேசாத மாநிலங்கள் உள்ளது என்பதை அமித்ஷா புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் ஒரே வரி அது குறைவான வரி என்பது தான் காங்கிரஸ் கட்சியின் வரி கொள்கை. இன்று தொடங்கும் நடைபயணம் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை வீழ்த்தும் நடைபயணமாக அமையும் என்றார்.

முன்னதாக, காந்தியடிகள், காமராஜர், ராஜாஜி ஆகியோரது உருவசிலைகளுக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர். போலீஸாரின் பாதுகாப்போடு வேதாரண்யம் நோக்கி நினைவு பாதயாத்திரை தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com