மோகனூர் காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் திடீர் போராட்டம்

மோகனூர் -நெரூர்  இடையிலான தடுப்பணை திட்டத்தை நிறைவேற்றக்கோரி காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டம் செய்தனர்.
மோகனூர் காவிரி ஆற்றில் இறங்கி தடுப்பணை திட்டத்தை நிறைவேற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
மோகனூர் காவிரி ஆற்றில் இறங்கி தடுப்பணை திட்டத்தை நிறைவேற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

நாமக்கல்: மோகனூர் -நெரூர்  இடையிலான தடுப்பணை திட்டத்தை நிறைவேற்றக்கோரி காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டம் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் - கரூர் மாவட்டம் நெரூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.700 கோடி மதிப்பீட்டில் கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்கப்படும் என கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது முதல்வர் அறிவித்தார். சில மாதங்களுக்கு முன் இத்திட்டம் பயனற்றது என தமிழக அரசு அதனை ரத்து செய்தது..

நாமக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி  மீண்டும் கதவணையுடன் கூடிய தடுப்பணை திட்டத்தை செயல்படுத்த வேண்டி, முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஈஸ்வரன் கோயில் அருகில் காவிரி ஆற்றில் இறங்கி 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

வெயிலை பொருள்படுத்தாமல் அவர்கள் ஆற்றில் இறங்கி அத்திட்டத்தை நிறைவேற்றக்கோரி முழக்கமிட்டனர். இந்த போராட்டம் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு விவசாய முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் செல்ல. ராசாமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் மோகனூர் - நெரூர் இடையில் ரூ.136 கோடியில் தடுப்பணை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த ஆய்வு பணிக்காக மட்டும் ரூ. 25 லட்சம் ஒதுக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ரூ.700 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தது. ஆனால் ஓரிரு மாதங்களுக்கு முன் மோகனூர் தடுப்பணை திட்டத்தால் எவ்வித பயனும் இல்லை என அந்தத் திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்தது. 

சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேலான நிலங்கள் பயன்பெறும் வகையிலான இந்த திட்டத்தை நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய மூன்று மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி அரசு கட்டாயம் செயல்படுத்த வேண்டும். அதனை வலியுறுத்தியே காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தப்பட்டது. தடுப்பணை திட்டம் செயல்படுத்தப் படாதபட்சத்தில் மேலும் பல்வேறு போராட்டங்களை விவசாய முன்னேற்ற கழகம் முன்னின்று நடத்தும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com