மலையடிப்பட்டியில் உயிர்த்த ஆண்டவர், புனித தோமையார் சந்திப்பு நிகழ்ச்சி

மலையடிப்பட்டி புனித தோமையார் திருமலைத் பேராலயத்தின் பாஸ்கா பெருவிழா மற்றும் புனித தோமையார் திருவிழா
உயிர்த்த ஆண்டவர், புனித தோமையார் சந்திப்பு
உயிர்த்த ஆண்டவர், புனித தோமையார் சந்திப்பு
Updated on
2 min read

மணப்பாறை அடுத்த மலையடிப்பட்டியில் நடைபெற்றும் வரும் புனித தோமையார் திருமலைத் திருத்தலத்தின் திருவிழாவில், மூன்றாம் நாள் நள்ளிரவில் உயிர்த்த ஆண்டவர், புனித தோமையார் சந்திப்பு நிகழ்ச்சியும், புனிதர்கள் இரத பவனியும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறித்துவர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

புனிதர்கள் இரத பவனி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மலையடிப்பட்டி புனித தோமையார் திருமலைத் பேராலயத்தின் பாஸ்கா பெருவிழா மற்றும் புனித தோமையார் திருவிழா தொடங்கியுள்ளது. நான்கு நாள்கள் நடைபெறும் திருவிழாவில் டிஜிட்டல் முறையில் ஆண்டவர் இயேசுவின் பாடுகளின் பாஸ்காவும்,  ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு பாஸ்கா நடைபெற்றதையடுத்து, மூன்றாம் நாள் நள்ளிரவு உயிர்த்த ஆண்டவர், புனித தோமையார் சந்திப்பு நிகழ்ச்சியும், புனிதர்கள் இரத பவனியும் நடைபெற்றது. கோவை ரோஸ்மேனியன் சபை பங்குத்தந்தை அபிநிக்கோலஸ் இரத மந்திரிப்பு செய்தார்.

உயிர்த்த ஆண்டவர், புனித தோமையார் சந்திப்பு நிகழ்ச்சி

திருமலையிலிருந்து தாரைத்தப்பட்டைகள் முழங்க இரத பவனியாக சென்ற தோமையார், சவரியார் ஆலயம் அமைந்துள்ள நடு வீதியில் உயிர்த்த ஆண்டவரை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டு இரதங்களும் நேருக்கு நேர் சந்தித்த வேளையில் ஆண்டவரிடமும், தோமையாரிடமும் உள்ள மாலைகள் மாற்றிக்கொள்ளப்படுகிறது. பின் ரதங்கள் சவரியார் ஆலயத்திடலுக்கு செல்கிறது. அங்கு சிறப்பு வழிபாடு, ஊர் நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பின் உயிர்த்த ஆண்டவர், புனித தோமையார் ரதங்கள் முன்னே செல்ல அதனைத்தொடர்ந்து புனிதர்களான ஆரோக்கியமாதா, அருளானந்தர், செபஸ்தியார், வீரமாமுனிவர், பனிமய மாதா, சவேரியார், சூசையப்பர், அந்தோனியார், வியாகுல மாதா, லூர்து மாதா, ஜெபமாலை அன்னை என 11 ரதங்களின் புனிதர்கள் பின் தொடர, ஊரின் முக்கிய வீதிகளில் ரதங்கள் பவனி சென்றது. திருவிழாவின் நிறைவு பகுதியாக இன்று பிற்பகலில் பெரிய தேர் பவனி நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைவர், நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com