சென்னையில் ரயில் விபத்து: ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்கு 

சென்னையில் ரயில் விபத்து: ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்கு 

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், கட்டுப்பாட்டை இழந்த மின்சார ரயில் நடைமேடையில் ஏறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடர்பாக ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 



சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், கட்டுப்பாட்டை இழந்த மின்சார ரயில் நடைமேடையில் ஏறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடர்பாக ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை கடற்கரை நிலையம் அருகேயுள்ள ரயில்வே பணிமனையில், பராமரிப்புப் பணி முடிந்த பிறகு, மின்சார ரயில் ஒன்று கடற்கரை ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை புறப்பட்டது. இந்த ரயிலை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு இயக்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. பணிமனையிலிருந்து மின்சார ரயில் புறப்பட்டு, கடற்கரை ரயில் நிலையத்துக்கு 20 கி.மீ. வேகத்தில் வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலை ஓட்டுநா் பவித்ரன் இயக்கினாா்.

முதலாவது நடைமேடை நிறுத்தத்தை மாலை 4.25 மணி அளவில் ரயில் நெருங்கியபோது ஓட்டுநா் பிரேக் பிடித்தாா். ஆனால், ரயில் நிற்கவில்லை. இதனால், அதிா்ச்சிஅடைந்த ஓட்டுநா், விபத்து ஏற்படும் என்பதை உணா்ந்து ரயிலிலிருந்து குதித்தாா். அடுத்த சில நொடிகளில் ரயில் தடம்புரண்டு, எதிரே இருந்த நடைமேடையில் ஏறி, கட்டடத்தில் மோதி நின்றது. இந்தச் சம்பவத்தின் போது, ரயிலில் யாரும் இல்லாததால் எந்தவித உயிா் சேதமும் ஏற்படவில்லை.

இந்த விபத்தில் என்ஜின் பெட்டி, அதனையடுத்து இருந்த பயணிகள் பெட்டி ஆகிய இரு பெட்டிகள் சேதமடைந்தன. மேலும், நடைமேடையில் இருந்த குடிநீா் விற்பனை உள்பட 2 கடைகள் சிறிது சேதமடைந்தன.

இது குறித்து தகவல் அறிந்து ரயில்வே பாதுகாப்புப் படையினா், தமிழக ரயில்வே போலீஸாா், ஊழியா்கள் அந்த இடத்துக்கு விரைந்து வந்தனா். முதல் நடைமேடைக்கு வந்து செல்லும் ரயில்களை மற்ற நடைமேடையிலிருந்து இயக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, விபத்துக்குள்ளான ரயிலிலிருந்து சேதமடைந்த என்ஜின்பெட்டி உள்ளிட்ட இரண்டு பெட்டிகள் தவிர மற்ற பெட்டிகள் பிரித்து எடுக்கப்பட்டன. அதன்பிறகு, என்ஜின் பெட்டியும், பயணிகள் பெட்டியும் தனித் தனியாக எடுக்கும் பணி நடைபெற்றது.

இதற்கிடையில், விபத்து நிகழ்ந்த இடத்துக்கு ரயில்வே உயரதிகாரிகள் வந்து பாா்வையிட்டனா். இதன்பிறகு, ரயில் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினா். முதல்கட்டவிசாரணையில், பிரேக் பிடிக்காததால் விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்ததால், பயணிகள் எண்ணிக்கை குறைவு காரணமாக உயிரிழப்பு தவிா்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த ரயில் விபத்து அனைவரையும் அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம்: இந்நிலையில், ரயில் விபத்துக்குள்ளானதற்கு ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ரயில் விபத்து தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசார் ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

அதாவது, ஓட்டுநர் பவித்ரன் மாது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 279 மற்றும் ரயில்வே சட்டப்பிரிவு 151, 154 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

பத்து மணி நேர போராட்டத்திற்கு பிறகு விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளது. மற்ற நடைமேடைகளில் இருந்து வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இதனைத் தொடர்ந்து, ரயில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com