தஞ்சாவூர் தேர் விபத்து: சட்டப்பேரவையில் இரங்கல்

தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் தஞ்சாவூர் சம்பவம் குறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

“தஞ்சாவூர்‌ மாவட்டம்‌, களிமேடு கிராமத்தில்‌ இன்று 27.4.2022 அதிகாலை நடைபெற்ற தேர்‌ திருவிழாவில்‌ எதிர்பாராத விதமாக தேர்‌ மின்கம்பியில்‌ உரசியதால்‌ ஏற்பட்ட விபத்தில்‌ 11 பேர்‌ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்‌ என்ற நெஞ்சை உலுக்கும் செய்தியை பேரவைக்கு மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறே. துயரமான செய்தியினைக்‌ கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன்‌.

களிமேடு அப்பர் திருக்கோயிலில் ஏப்ரல் 24 முதல் நடைபெற்ற 94வது ஆண்டு சித்திரை திருவிழாவின் ஒருபகுதியாக, இன்று அதிகாலை 3.10 அளவில் தஞ்சாவூரிலிருந்து பூதலூர் செல்லும் சாலையில் தேரோட்டம் முடிந்து தேரை திருப்ப முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த உயர்மின்அழுத்த கம்பிகள் உரசியதாக தெரிகிறது.

அப்போது ஏற்பட்ட மின் விபத்தில் சம்பவ இடத்திலேயே‌ 11 பேர் உயிரிழந்த துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. காயமடைந்த 16 பேரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து சிறப்பு சிகிச்சையும் அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இப்பணிகளை மேற்பார்வையிடவும், துரிதப்படுத்திடவும் தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ், மக்கள் பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூருக்கு நேரடியாக சென்று விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவுள்ளேன்” என்றார்.

தொடர்ந்து, உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு பேரவை ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கும் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். இதையடுத்து, அனைத்து உறுப்பினர்களும் இரண்டு நிமிடங்கள் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com