

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில், தேரில் மின்சாரம் பாய்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சாவூர் - பூதலூர் சாலையில் 4 கி.மீ. தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் அப்பர் மடம் உள்ளது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் திருநாவுக்கரசு (அப்பர்) சுவாமிகளின் சித்திரை மாத சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
இதன்படி, 94-ஆம் ஆண்டாக மூன்று நாள் சதய விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இத்திருவிழாவில், இரவில் மின் அலங்காரத் தேர் புறப்பாடு தொடங்கியது. இதில் அப்பர் படம் வைத்து தேர் இழுத்து வரப்பட்டது.
தொடர்ந்து களிமேடு கிராமத்திலுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. வீட்டுக்கு வீடு தேங்காய், பழம் வைத்து படையல் செய்து வழிபட்டனர்.
புதன்கிழமை அதிகாலை 3.10 மணியளவில் பிரதான சாலைக்கு தேர் வந்தபோது, மேலே சுமார் 25 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் தேரின் உச்சிப் பகுதி உரசியது.
இதனால், தேரை இழுத்து வந்த மக்கள் மீதும், சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. தேரும் தீப்பற்றி எரிந்ததால், தேரில் இருந்த மக்களாலும், சுற்றியிருந்தவர்களாலும் உடனடியாகத் தப்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
மின்சாரம் பாய்ந்ததில், களிமேடு கிராமத்தைச் சேர்ந்த எம். மோகன் (22), முன்னாள் ராணுவ வீரர் கே. பிரபாத் (36), ஏ. அன்பழகன் (60), இவரின் மகன் ராகவன் (24), டி. செல்வம் (56), எம். ராஜ்குமார் (14), ஆர். சாமிநாதன் (56), ஏ. கோவிந்தராஜ் (50), பரிசுத்தம் நகரைச் சேர்ந்த நாகராஜ் (60), நரிமேடைச் சேர்ந்த ஆர். சந்தோஷ் (15) ஆகிய 10 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட களிமேடைச் சேர்ந்த எஸ். பரணி (13) சிகிச்சை பலனின்றி இறந்தார்.
17 பேர் காயம்: காயமடைந்த களிமேடு கிராமத்தைச் சேர்ந்த பி. கெளசிக் (13), எம். ரவிச்சந்திரன் (48), ஆர். கலியமூர்த்தி (40), கே. ஹரிஷ் ராம் (13), எம். நிதிஷ் ராம் (13), ஏ. மாதவன் (16), டி. மோகன் (54), என். விஜயகுமார் (23), பி. அன்பரசு (32), ஜி. விக்னேஷ் (21), கே. திருஞானம் (36), வி. ஹரிஹரன் (14), மாதவன் மனைவி சுனிதா (33), பி. எஸ். அருண்குமார் (24), எம். தினேஷ் (20), சி. கோவிந்தசாமி (48), எம். செந்தில்குமார் (49) ஆகிய 17 பேர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்த தஞ்சாவூர் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார். இதையடுத்து, களிமேடு கிராமத்துக்குச் சென்று சம்பவம் நிகழ்ந்த இடத்தையும் அவர் பார்வையிட்டார்.
மேலும், மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம் உள்ளிட்டோர் களிமேடு கிராமத்துக்கும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்தனர்.
குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
தஞ்சாவூர் அருகே நடைபெற்ற தேரில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக குடியரசுத் தலைவர், பிரதமர், உள்ளிட்டோர் ட்விட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: தேர்த் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து பலர் உயிரிழந்தது வார்த்தைகளில் சொல்ல முடியாத சோகம்.
பிரதமர் மோடி: இந்த துயரமான தருணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்
உள்துறை அமைச்சர் அமித் ஷா: விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்தனைகள்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
புதுவை துணைநிலை ஆளுநர் (பொ) தமிழிசை: தேர்த் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். சிகிச்சை பெற்று வருவோர் நலமுடன் திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.