விலைவாசி உயர்ந்தால் மக்களால் எப்படி வாழ முடியும்? மக்களவையில் கனிமொழி

மக்களவையில் நடைபெற்று வரும் விலை உயர்வு மீதான விவாதத்தில் திமுகவின் எம்.பி. கனிமொழி பங்கேற்று பல்வேறு கேள்விகளை மத்திய அரசிடம் முன்வைத்தார்.
மக்களவையில் கனிமொழி எம்.பி.
மக்களவையில் கனிமொழி எம்.பி.

மக்களவையில் நடைபெற்று வரும் விலை உயர்வு மீதான விவாதத்தில் திமுகவின் எம்.பி. கனிமொழி பங்கேற்று பல்வேறு கேள்விகளை மத்திய அரசிடம் முன்வைத்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கரோனாவில் இருந்து மீண்ட மத்திய நிதியமைச்சர் இன்று மக்களவைக்கு வந்த நிலையில் பிற்பகல் 2 மணிக்கு விலை உயர்வு குறித்து விவாதம் பட்டியலிடப்பட்டது.

இந்த விவாதத்தில் திமுக சார்பில் கனிமொழி பேசியதாவது:

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் கறுப்புப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாஜக எம்.பி. குறிப்பிட்டார். கறுப்புப் பணத்தை ஒழிக்கத்தான் பணமதிப்பிழப்பு கொண்டு வரப்பட்டது. அதற்கு பிறகும் நாட்டில் கறுப்புப் பணம் கைப்பற்றப்பட்டது எப்படி?

பணமதிப்பிற்கு பிறகு பொருளாதாரம் கடுமையாக சரிந்திருக்கிறது. தமிழகத்தில் முந்தைய அதிமுக ஆட்சியில் 50,000 சிறுகுறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பணமதிப்பிழப்பின் போது பலர் வரிசையில் நின்று உயிரிழந்தனர். இத்தனை இன்னல்களை சந்தித்ததற்கு ஒரே காரணம் அதற்கு பிறகு கறுப்புப் பணம் இருக்காது எனக் கூறியது தான். ஆனால், இப்போதும் கறுப்புப் பணம் இருக்கிறது எனக் கூறும்போது மத்திய அரசு இதற்கு பதிலளிக்க வேண்டும்.

எழை மக்கள் ஒவ்வொரு நாளும் வாழ்வதற்கு போராடக் கூடிய நிலையை இந்த அரசு உருவாக்கியுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவுக்கு தரக்கூடிய மானியம் யாருடைய வங்கிக் கணக்குகளிலும் வந்து சேருவதில்லை.

சமையல் எண்ணெய் உள்பட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால் அன்றாட உணவு வாங்கக் கூட முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

ஆனால், இந்தியாவில் இருக்கக் கூடிய ஒரு தொழிலதிபர் மட்டும் உலகளவில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கார்ப்ரேட் தொழில் நிறுவனங்களுக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது. அடிப்படை மக்களுக்கு உதவ மறுக்கும் அரசு, கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு மட்டும் உதவும் ஆட்சி நடைபெறுகிறது.

சுதந்திரம் பெற்று இவ்வளவு ஆண்டுகளில் இந்த அளவிற்கு வேலையின்மையை நாம் சந்தித்ததில்லை. அக்டோபரில் 50 லட்சம் பேருக்கு வேலையின்மை ஏற்படும் சூழல் எழுந்துள்ளது. நம் நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் அச்சுறுத்தும் விதத்தில் உள்ளது.

பாஜக ஆளாத மாநிலங்களுக்கு ரிசர்வ் வங்கி கடன் கொடுக்க மறுப்பதாக பாஜக எம்.பி. தெரிவித்திருந்தார். நீங்கள் ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளுக்கு, நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை கொடுத்தாலே மேலும் வளமான மாநிலமாக மாற முடியும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com