வானகரம் சுங்கச்சாவடி(கோப்புப்படம்)
வானகரம் சுங்கச்சாவடி(கோப்புப்படம்)

இந்த ‘டோல்கேட்’களை எப்போ மூடுவாங்க? தமிழகத்தில் 22!

தமிழகத்தில் 60 கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கக்கூடிய  22 சுங்கச்சாவடிகளை மூட எப்போது நடவடிக்கை எடுப்பார்கள்?

தமிழகத்தில் 60 கிலோ மீட்டர் சுற்றளவில் இருப்பதாகக் கண்டறியப்பட்ட 22 சுங்கச் சாவடிகளை மூடுவதற்கான நடவடிக்கைகளை எப்போதுதான் எடுக்கப் போகிறார்கள் என்பதில் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் வாகன ஓட்டிகள்.

மக்களவையில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி பேசிய திருமாவளவன், தமிழகத்தில் விதிகளை மீறி சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, விதிகள் 2008 சட்டப்படி 60 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருக்கலாம். மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் செயல்படும் பிற சுங்கச்சாவடிகள் மூன்று மாதங்களில் மூடப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மொத்தம் 56 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. அதில், 60 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் 22 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்து 4 மாதங்களுக்கு மேலாகியும் தமிழகத்தில் 13 தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் 22 சுங்கச்சாவடிகளை மூட எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

விதிகளின்படி தமிழகத்தில் குறைந்தது 11 சுங்கச்சாவடிகள் மூடப்படும் என்றும், சுங்கச்சாவடிகளை மூடுவதற்கான எந்தவொரு வழிகாட்டுதல்களையும் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மாநிலப் பிரிவுகளுக்கு வழங்கவில்லை என்றும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விசாரித்தபோது தெரிய வந்துள்ளது.

இந்த சுங்கச்சாவடிகளில்  தாம்பரம் - திண்டிவனம் வரையிலான என்.எச். 45 சாலையிலுள்ள பரனூர் மற்றும் ஆத்தூர், பூந்தமல்லி - வாலாஜாபேட்டை என்.எச். 4-ல் உள்ள நெமிலி மற்றும் சென்னசமுத்திரம் ஆகிய நான்கு சுங்கச் சாவடிகளும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களிடமிருந்து சுங்கம் வசூலித்துக் கொண்டிருக்கிறது, ஆனால், இவ்விரு பகுதிச் சாலைகளுமே அரசு நிதியால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது.

60 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள சுங்கச்சாவடிகள்

  • சென்னை புறவழிச் சாலை : 1. வானகரம் மற்றும் 2. சூரப்பட்டு
  • தாம்பரம் - திண்டிவனம் என்எச் 45 : 3. பரனூர் மற்றும் 4. ஆத்தூர்
  • திண்டிவனம் - உளுந்தூர்பேட்டை என்எச் 45 : 5. விக்கிரவாண்டி
  • பூந்தமல்லி - வாலாஜாபேட்டை என்எச் 4 : 6. சென்னசமுத்திரம்
  • கிருஷ்ணகிரி - வாலாஜாபேட்டை என்எச் 48 : 7. வாணியம்பாடி மற்றும் 8. பள்ளிக்கொண்டா
  • கிருஷ்ணகிரி - தும்பிபாடி என்எச் 7 : 9. பாளையம்
  • குமாரபாளையம் - செங்கப்பள்ளி என்எச் 47 : 10. விஜயமங்கலம்
  • செங்கப்பள்ளி - கோவை புறவழிச்சாலை (தமிழக - கேரள எல்லை): 11. செங்கப்பள்ளி
  • சேலம் - உளுந்தூர்பேட்டை என்எச் 68 : 12. மேட்டுப்பட்டி, 13. நாதகரை மற்றும் 14. வீரசோழபுரம்
  • உளுந்தூர்பேட்டை - பாடலூர் என்எச் 45 : 15. செங்குறிச்சி மற்றும் 16. திருமாந்துறை
  • திண்டுக்கல் - சமயநல்லூர் என்எச் 7 : 17. கொடை ரோடு 
  • மதுரை - கன்னியாகுமரி என்எச் 7 : 18. கப்பலூர், 19. எட்டூர்வட்டம், 20. சாலைப்புதூர் மற்றும் 21. நாங்குனேரி
  • ஓசூர் - கிருஷ்ணகிரி என்எச் 44 : கிருஷ்ணகிரி

இந்த சுங்கச்சாவடிகள் எப்போது மூடப்படும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் நிலவி வருகின்றன. மத்திய அரசும் மாநில அரசும் எப்போது என்ன நடவடிக்கை எடுத்து, இந்த 24 மணி நேர ஏமாற்றைத் தடுக்கப் போகின்றன என்று எதிர்பார்த்திருக்கிறார்கள் வாகன ஓட்டிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com