முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்துப் பாதையை மாற்றும் கேரளம்: விவசாயிகள் குற்றச்சாட்டு

முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து மாற்றுப்பாதையில் செல்வதாக கேரள அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்துப் பாதையை மாற்றுகிறதா கேரளம்
முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்துப் பாதையை மாற்றுகிறதா கேரளம்


கம்பம்: முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து மாற்றுப்பாதையில் செல்வதாக கேரள அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்தை, கேரள நீர்ப்பாசனத் துறையினர்,  மாற்றுப்பாதையில் திருப்பி விடுகின்றனர், எனவே நீர் பிடிப்பு பகுதிகளை ட்ரோன் மூலம், மத்திய நீர்வளத்துறை ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும் என்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சேத்து, பொன்.காட்சிக்கண்ணன், அன்வர் பாலசிங்கம் ஆகியோர் மத்திய நீர்வள ஆணையகம் மற்றும் மத்திய தலைமை கண்காணிப்பு குழு தலைவர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, 
கடந்த ஜூலை  மாதத்திலிருந்து,  மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளை ஒட்டி இருக்கக்கூடிய அத்தனை அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் மட்டும் உயரவில்லை, நீர்வரத்து இயல்பு நிலைக்கு மாறாக குறைந்த அளவாகவே வந்து கொண்டிருக்கிறது.

பெரியாறு அணையின் உள்பகுதிகளுக்குள் கேரள அரசின் நீர்ப்பாசனத் துறையினர் கட்ச், சபரிகிரி, ப்ளீச்சிங் ஆகிய 3  தடுப்பணைகளை கட்டி,  இடுக்கி அணைக்கு தண்ணீரை கொண்டு செல்கிறது என்று பல ஆண்டு காலங்களாக விவசாய சங்கத்தினர் புகார் கூறிவந்துள்ளனர்.  இந்தக் குற்றச்சாட்டை  முன்னாள் கேரள நீர்வளத்துறை அமைச்சர்  பிரேமச்சந்திரன் மறுக்கவில்லை.

முல்லைப் பெரியாறு அணையை முழுமையாக கண்காணிக்கும் உச்ச நீதிமன்றம், மத்திய நீர்வள ஆணையத்துக்கு தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளை கொடுத்து, மேற்பார்வை குழுவின் முன்னிலையில் ட்ரோன் மூலமாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும்.

999 ஆண்டு கால ஒப்பந்தந்தை கேரளம் மீறும் பட்சத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேரளத்தில் தொடர்ந்து ஒரு மாத காலமாக பெய்து வரும் மழையில், கிட்டத்தட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

இதே முல்லைப்பெரியாறு அணையை ஒட்டி இருக்கும், ஆனையிரங்கல், குண்டல, மாட்டுப்பட்டி உள்ளிட்ட அணைகள் எல்லாம் நிரம்பி வழியும் நிலையில், பெரியாறு அணைக்கான நீர்வரத்து மட்டும் இன்னும் 3000 கன அடியை தாண்டவில்லை. இதற்குப் பின்னால் கேரள மாநில அரசு செய்திருக்கும் சதியை, அம்பலப்படுத்த வேண்டும்.

உச்சநீதிமன்றம்  உடனடியாக தலையிட்டு தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5  மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com