எடப்பாடி அருகே குடியிருப்புகளில் புகுந்த வெள்ள நீர்! (படங்கள்)

எடப்பாடி அடுத்த காவிரிக்கரை பகுதிகளில் உள்ள பல்வேறு குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
எடப்பாடி அருகே குடியிருப்புகளில் புகுந்த வெள்ள நீர்! (படங்கள்)

எடப்பாடி: மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி அடுத்த காவிரிக்கரை பகுதிகளில் உள்ள பல்வேறு குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். 

கடந்த சில தினங்களாக மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து அதிக அளவிலான உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இதனை அடுத்து எடப்பாடி அடுத்த கோனேரிப்பட்டி அடுத்த மந்தியான் திட்டு, அக்ரஹாரம், பரிசல் துறை ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவற்றில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இதனால் கடும் பாதிப்பிற்குள்ளான அப்பகுதி வாசிகள், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தாங்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி வருவதாகவும், தங்கள் பகுதியில் இருந்து பிரதான சாலையை இணைக்கும் சாலைகள் பல தண்ணீரில் மூழ்கியதால், குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமலும், வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமலும் தாங்கள் அவதிப்பட்டு வருகிறோம் என்று வேதனை தெரிவித்தனர். 

மேலும், அதிகப்படியாக தேங்கிய தண்ணீரில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அதிக எண்ணிக்கையில் குடியிருப்புப் பகுதியில் நுழைவதால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இப்பகுதியினை பார்வையிட்டு தங்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னலுக்குத் தீர்வு காண வேண்டுமென வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் அதிக அளவு திறக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் இப்பகுதியில் வெள்ள பாதிப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com