தோட்டக்கலை திட்டம்: பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

தோட்டக்கலை திட்டத்தில் பயன்பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.  
தோட்டக்கலை திட்டம்: பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

தோட்டக்கலை திட்டத்தில் பயன்பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. 
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு 2022-23 ஆம் ஆண்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்து செயல்படுத்தி வருகிறது. காய்கறிகள், பழங்கள் போன்ற தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடிப்பரப்பினை அதிகரித்து, விளைச்சலைப் பெருக்கவும், அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் 2022-23 ஆம் ஆண்டில் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக, அரசு முழு மாநில நிதியில் ரூ. 27.50 கோடி நிதியினை ஒதுக்கி உள்ளது. இனவாரியான விபரம் பின்வருமாறு.
அ. சாகுபடிப் பரப்பினை அதிகரிக்க விதைகளும், நடவுக் கன்றுகளும் விநியோகம்
கத்தரி, மிளகாய், தக்காளி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிப் பயிர்களில் குழித்தட்டு நாற்றுக்களும், வெண்டை, முள்ளங்கி, கீரை, அவரை போன்ற
காய்கறிகளில் விதைகளும் வழங்கி 7,100 ஏக்கரிலும், மா, கொய்யா, பப்பாளி, மாதுளை, எலுமிச்சை, சப்போட்டா போன்ற பழங்களின் சாகுபடியினை 2,938
ஏக்கரிலும், மல்லிகை, கனகாம்பரம், செண்டுமல்லி, ரோஜா போன்ற மலர் வகைகளை 1,888 ஏக்கரிலும், கொத்தமல்லி, மஞ்சள், இஞ்சி, மிளகு, கறிவேப்பிலை போன்ற நறுமணப் பயிர்களை 1,375 ஏக்கரிலும், ஆக மொத்தம் 13,300 ஏக்கரில் தோட்டக்கலை பயிர்களின் பரப்பினை அதிகரிப்பதற்குத் தேவையான விதைகளும் நடவுக்கன்றுகளும் 40 சதவிகித மானியத்தில் விநியோகம் செய்வதற்காக ரூ.8.44 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆ. காய்கறி உற்பத்தியை அதிகரிக்க விதைகளும், நீரில் கரையும் உரங்களும் விநியோகம்
சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துள்ள காய்கறி வயல்களில் துல்லிய பண்ணையம் மூலம் உயர் விளைச்சலைப் பெறுவதற்கு, 4,167 ஏக்கருக்குத் தேவையான ரூ,6,000 மதிப்பிலான காய்கறி விதைகளும், நீரில் கரையும் உரங்களும் மானியத்தில் விநியோகம் செய்வதற்காக அரசு ரூ. 2.50 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
இ. உழவர் சந்தைகளில் காய்கறிகளின் வரத்தை அதிகரிக்க ரூ.5 கோடி 
உழவர் சந்தைகளில் காய்கறி வரத்தினை அதிகரிக்க, உழவர் சந்தையை ஒட்டியுள்ள கிராமங்களில் காய்கறி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஏக்கருக்கு ரூ. 8,000 வீதம் 6,250 ஏக்கருக்கு மானியம் வழங்க அரசு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
ஈ. ஊடுபயிராக வாழை, காய்கறிகளை சாகுபடி செய்ய ஊக்கத் தொகை
தென்னந்தோப்பில் ஊடுபயிராக 3,571 ஏக்கரில் வாழையும், வாழையில் ஊடு பயிராக 5,000 ஏக்கரில் காய்கறி பயிர்களும் சாகுபடி செய்வதை ஊக்குவிக்க மொத்தம் ரூ.5.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உ. தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கான கருவிகள் மானியத்தில் விநியோகம்
நெகிழிக்கூடைகள், அலுமினிய ஏணிகள், பழங்கள் அறுவடைக்கு வலைக்கருவி, மலர் அறுவடைக்கு முகப்பு விளக்கு, கவாத்துக் கத்தரி, தெளிப்பான்கள்,
மரவள்ளிக் கரணை வெட்டுவதற்கான இயந்திரம் போன்ற கருவிகள் 50 சதவிகித மானியத்தில் வழங்குவதற்காக இத்திட்டத்தின் கீழ், ரூ.1.506 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊ. உயர் தொழில்நுட்ப சாகுபடிக்கு ரூ.1.6 கோடி நிதி ஒதுக்கீடு
பசுமைக் குடில், நிழல் வலைக்குடில் போன்ற உயர் தொழில்நுட்ப கட்டமைப்புகள் 23,000 சதுர மீட்டர் பரப்பில் அமைத்து தோட்டக்கலைப் பயிர்கள்
சாகுபடி செய்ய 50 சதவீத மானியமாக ரூ. 85 இலட்சமும், சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சேலம், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நகரங்களில் ஹைட்ரோபோனிக்ஸ், செங்குத்துத் தோட்டம் மூலம் தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்வதற்கு ரூ. 75 இலட்சமும் நிதி வழங்கப்பட்டுள்ளது.
எ. வெங்காய சேமிப்புக் கிடங்கு
சந்தை விலை குறையும் போது, வெங்காயத்தை சேமித்து வைத்து நல்ல விலை கிடைக்கும் போது, விவசாயிகள் விற்பனை செய்வதற்காக குறைந்த விலையில் வெங்காய சேமிப்புக் கிடங்கை 5 முதல் 25 மெட்ரிக் டன் வரை வெங்காய விவசாயிகள் தேவைக்கேற்ப உருவாக்குவதற்காக 50 சதவிகித மானியமாக டன்னுக்கு ரூ.3,500 என்ற அளவில் மானியம் வழங்குவதற்காக ரூ.70 இலட்சம் அனுமதித்துள்ளது.
ஏ. மாடித்தோட்டத் தளைகள் விநியோகம்
வீட்டு மாடியில் நமக்குத் தேவையான காய்கறிகளை சாகுபடி செய்வதை ஊக்குவிப்பதற்காக, ஆறு செடி வளர்ப்புப் பைகள், ஆறு கிலோ தென்னை நார்க்கழிவுக் கட்டிகள், ஆறு வகையான காய்கறி விதைகள், உயிர் உரங்கள், வேப்பெண்ணெய்  மருந்து, மாடித்தோட்டத்தில் காய்கறி வளர்ப்புமுறைக்கான
கையேடு போன்ற இடுபொருட்கள் அடங்கிய தொகுப்புகள் 50 சதவிகித மானியத்தில் விநியோகிப்பதற்காக அரசு ரூ.1.125 கோடி ஒதுக்கியுள்ளது.
ஐ. தோட்டக்கலை சார்ந்த இதர இனங்கள்
அரசு மாணவியர் விடுதிகளில் தரமான ஊட்டச்சத்து அடங்கிய உணவினை வழங்கும் நோக்கில், 250 அரசு மாணவியர் விடுதிகளில் தோட்டம் அமைக்க 100
சதவீத மானியத்தில் ரூ. 8,000 மதிப்பிலான பழச்செடிகள், கீரை, காய்கறி விதைகள், மூலிகைச் செடிகள், கருவிகள் விநியோகம், காளான் வளர்ப்பு மூலம் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக காளான் வளர்ப்புக்கூடம் அமைப்பதற்கு அதிகபட்சமாக ரூ.50,000 நிதி உதவி, வெற்றிலையில் ஒருங்கிணைந்த உர, பூச்சி மேலாண்மைக்காக ஏக்கருக்கு ரூ.4,000 பின்னேற்பு மானியம் போன்ற பணிகளும் இத்திட்டத்தில் மேற்கொள்ளப்படும்.
எனவே, ரூ.27.50 கோடி நிதியில் தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் மாநில தோட்டக்கலை வளர்ச்சித்திட்டத்தில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பெயரை இணையதளம் மூலம் பதிவு செய்வது அவசியமாகும். விவசாயிகள் தாங்களாகவோ, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மூலமாகவோ tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்து, பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com