
சென்னை மாநிலக் கல்லூரியில் பயில இந்தாண்டு 1 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
என்ஐஆர்எஃப் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவில் 3-வது சிறந்த கல்லூரியாக தேர்வுசெய்யப்பட்டுள்ள சென்னை மாநிலக் கல்லூரியில் இந்தாண்டு இளங்கலை படிப்புகளில் சேர 1,106 இடங்களே உள்ள நிலையில் 95,136 மாணவர்கள் விண்ணபித்துள்ளனர். வழக்கமாக 30.000 - 35,000 விண்ணப்பங்களே வரும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால், கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்சி மற்றும் மாநில வாரிய மாணவர்களின் தேர்ச்சி அதிகரித்திருந்ததால் 53,668 விண்ணப்பங்கள் வந்திருந்திருந்தன.
தற்போது, மாநிலக் கல்லூரியில் பயில மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இதையும் படிக்க: அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் பதவி உயர்வு: தலைமைச் செயலாளர் உத்தரவு
இதுகுறித்துக் கல்லூரியின் முதல்வர் ஆர்.ராமன் ‘கடந்த ஜூலை 5-ஆம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இக்கல்லூரியைப் பாராட்டினார். அதன்பின் என்ஐஆர்எஃப் தரவரிசை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது, ஆன்லைன் விண்ணப்பம் ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஜூலை 27ஆம் தேதி நிறைவடைந்தது. சி.வி.ராமன் போன்ற நோபல் பரிசு பெற்றவர்களை மாநிலக் கல்லூரி உருவாக்கியிருந்தாலும், கடந்த காலங்களில் நடந்த சில சம்பவங்களால் கல்லூரி குறித்து எதிர்மறையான கருத்து நிலவியது. இருப்பினும், இந்த ஆண்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பார்த்த பிறகு, இந்தக் கல்லூரி பற்றிய மக்களின் கருத்து மாறிவிட்டது என நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.
மேலும், ‘கல்விக்கட்டணம் செலுத்த முடியாத கிராமப் புறங்களில் உள்ள பின் தங்கிய மாணவர்களால் அதிகமான விண்ணப்பங்கள் வந்திருக்கலாம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். ஆனால், இம்முறை நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களும் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனர். 380 முதல் 400 வரை (95% மற்றும் அதற்கு மேல்) மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் வணிகவியல் படிப்பிற்கு சேர ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் கட்ட கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்தமுறை அனைத்து பாடப் பிரிவுகளிலும் எங்கள் கட்-ஆஃப் மதிப்பெண் 2% முதல் 4% வரை அதிகரித்துள்ளது’ என்றார்
இந்தமுறை மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.