
புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பில் பழமை வாய்ந்த புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் 171-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பில் பழமை வாய்ந்த புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 171-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவையொட்டி ஆலய வளாகத்தில் காலை பங்குத்தந்தை வின்சென்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆண்டு பெருவிழா கொடி, ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. அப்போது ஏராளமான கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவப் பாடல்கள் பாடியவாறு கொடியின் பின்பு ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் ஆலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் ஆண்டு பெருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக சேலம் மறை மாவட்ட ஆயர் இராயப்பன் கலந்து கொண்டு ஆண்டு பெருவிழா கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றினார். இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நாள்தோறும் காலை மாலை சிறப்பு திருப்பதிகளும், மாலை நேரங்களில் சிறிய தேர் பவனி நடைபெறும். அதைத் தொடர்ந்து வருகிற 15-ஆம் தேதி ஆடம்பர தேர் பவனியும், அதனைத் தொடர்ந்து 16-ஆம் தேதி கொடி இறக்கமும் நடைபெற உள்ளது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.