சர்வாதிகாரியாக மாறுவேன் என எச்சரிக்கும் ஸ்டாலின்: ஏன்? எதற்கு?

‘சாஃப்ட் முதலமைச்சர்’ என்று யாரும் கருதிவிட வேண்டாம். போதைப் பொருள் நடமாட்டத்திற்கு துணை போவோருக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Published on
Updated on
2 min read


‘சாஃப்ட் முதலமைச்சர்’ என்று யாரும் கருதிவிட வேண்டாம். போதைப் பொருள் நடமாட்டத்திற்கு துணை போவோருக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஆற்றிய நிறைவுரையில், 
தமிழகத்தின் முதலமைச்சராக சமூக மருத்துவனான தமிழ்நாட்டு எதிர்காலம் குறித்து சிந்தித்து செயலாற்றக்கூடியவன் நான். காவல் துறை அதிகாரிகளை அழைத்து பூட்டிய அறைக்குள் இதனைப் பேசுவதால் பயனில்லை. 

காவல்துறை மட்டுமல்ல, அத்துறையுடன் சேர்ந்து மக்கள் அனைவரும் காவலர்களாக மாறி இந்தப் போதைப் பாதையை அடைத்தாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதற்கு ஒரு சில முக்கிய அறிவிப்புகளை நான் இங்கே வெளியிட விரும்புகிறேன்.

  • மதுவிலக்கு அமலாக்கப்பிரிவோடு போதைப் பொருள் நுண்ணறிவு தடுப்புப் பிரிவு இணைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தேன். அதற்கு விரைவில் அரசாணை வழங்கப்படும்.
  • என்டிபிஎஸ் வழக்குகளை விசாரிக்க, தற்போது 12 சிறப்பு நீதிமன்றங்கள் இருக்கின்றன. இனி இரு மாவட்டங்களுக்கு ஒரு சிறப்பு நீதிமன்றம் என முதற்கட்டமாக அமைக்கப்படும்.
  • போதைப் பொருள் தடுப்பில் தகவல் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றுகிறது. ஆகவே, இப்பிரிவிற்கு தனியாக ஒரு “சைபர் செல்”உருவாக்கப்படும்.
  • போதைப்பொருள் தடுப்புப் பிரிவு – மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுடன் இணைக்கப்படுவதால், மதுவிலக்குப் பிரிவில் உள்ள “மத்திய நுண்ணறிவுப் பிரிவு” மேலும் வலுப்படுத்தப்படும்.
  • இந்த ஆலோசனைகளை, அறிவுரைகளை, புதிய அறிவிப்புகளோடு - ஒரு எச்சரிக்கையையும் விடுக்க நான் விரும்புகிறேன்.
  • காவல்துறையில் உள்ளவர்கள் தவறு செய்யக்கூடாது என்று திரும்பத் திரும்ப நான் சொல்லி வருகிறேன். சாதாரணத் தவறுகளுக்கே துணைபோகக் கூடாது என்றால், நம்முடைய அமைச்சர் துரைமுருகன் சொன்னதுபோல, ஒரு சமுதாயத்தையே சீரழிக்கும் போதைப் பொருள் நடமாட்டத்திற்கு எந்த விதத்திலும் துணைபோகக் கூடாது.

இதை ஏதோ நான் விளையாட்டாகச் சொல்லவில்லை. இவர் ‘சாஃப்ட் முதலமைச்சர்’என்று யாரும் கருதிவிட வேண்டாம். நேர்மையானவர்களுக்குத்தான் நான் சாஃப்ட். தவறு செய்வோருக்கு - குறிப்பாக போதைப் பொருள் நடமாட்டத்திற்கு துணை போவோருக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன். 

அதற்கான அதிகாரத்தை நான் எங்கும் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. என்டிபிஎஸ் சட்டத்தில் உள்ள 32B (எ) பிரிவை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பிரிவில் உள்ள, குற்றவாளி ஒரு பொதுப் பதவியில் இருக்கிறார் என்பதும், அந்தக் குற்றத்தைச் செய்வதில் அவர் அந்த அலுவலகத்தைப் பயன்படுத்திக் கொண்டார் என்பதும்" (“the fact that the offender holds a public office and that he has taken advantage of that office in committing the offence”) என்ற வாசகத்தைக் குறிப்பாக நினைவில் கொள்ளுங்கள்.

ஆனால், அப்படியொரு நிலைமைக்கு என்னையோ அல்லது உங்களையோ உங்களின்கீழ் உள்ள அதிகாரிகள் தள்ளி விடமாட்டார்கள், அப்படியொரு சூழ்நிலையை உருவாக்க மாட்டார்கள் என்று இன்னமும் நம்புகிறேன். 

நமக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டிற்கு, போதைப் பொருள் அறவே கூடாது! அந்த இலக்கை நோக்கி அனைவரும் நடைபோடுவோம். போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com