ஆளுநரை கேள்வியெழுப்பினால் அண்ணாமலை கொதிப்பது ஏன்? கே. பாலகிருஷ்ணன்

ஆளுநரை கேள்வியெழுப்பினால் அண்ணாமலை கொதிப்பது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுநரை கேள்வியெழுப்பினால் அண்ணாமலை கொதிப்பது ஏன்?
ஆளுநரை கேள்வியெழுப்பினால் அண்ணாமலை கொதிப்பது ஏன்?

ஆளுநரை கேள்வியெழுப்பினால் அண்ணாமலை கொதிப்பது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 
                தமிழக ஆளுநரை ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். அவர் யாரை வேண்டுமானாலும் சந்தித்து பேச உரிமையுள்ளது. அத்தகைய சந்திப்பை  சிபிஐ (எம்) கேள்வியெழுப்பவில்லை. அதேசமயம், “நாங்கள் அரசியல் பேசினோம்; ஆனால் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது” என ரஜினிகாந்த் அவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.  “பகிரங்கமாக பகிர்ந்து கொள்ள முடியாத” அளவுக்கு பேசிய அரசியலின் மர்மம் என்ன? ஆளுநர் அரசியல்வாதியாகவும், ஆளுநர் மாளிகையை அரசியல் கட்சி அலுவலகமாகவும் மாற்றுவது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்பதையே சிபிஐ (எம்) கேள்விக்குள்ளாக்கியது.

இக்கேள்விக்கு ஆளுநரோ, ஆளுநர் அலுவலகமோ பதில் அளித்திருக்க வேண்டுமே தவிர, முந்திரிக்கொட்டையைப் போல் முந்திக்கொண்டு அண்ணாமலை பேட்டியளிக்க எந்த அவசியமுமில்லை. அண்ணாமலை ஒன்றும் ஆளுநரின் செயலாளரோ,  செய்தி தொடர்பாளரோ அல்ல; அப்படியிருக்கும் போது வரிந்துகட்டிக் கொண்டு அண்ணாமலை ஆளுநருக்கு வக்காலத்து வாங்குவது “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பது போல் உள்ளது.

மாநில அரசின் உரிமைகளை பறிப்பது, மத்திய அரசின் கொள்கைகளை நேரடியாக தமிழ்நாட்டில் நுழைப்பது, மாநில அரசுக்கு தெரியாமலேயே பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை நடத்துவது, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து தமிழ்நாட்டிற்கு ஏற்ற ஒரு கல்விக்கொள்கையை உருவாக்க தமிழக அரசு  ஆலோசனைக்குழு அமைத்திருக்கிற நிலையில், புதிய கல்விக்கொள்கையை நிறைவேற்றுவதற்கு பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் கூட்டத்தை நடத்துவது போன்ற காரியங்களை தமிழக ஆளுநர் செய்து வருகிறார்.

ஆளுநர் என்ற எல்லையைத் தாண்டி ஆர்.எஸ்.எஸ்.சினுடைய கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மேடைகளில் பிரசாரம் செய்து வருகிறார். அவரின் இத்தகைய நடவடிக்கைகள் ஏற்கனவே கடும் விமர்சனத்தை தமிழகத்திலேயே உருவாக்கியுள்ளன. இந்த சூழலில் ஆளுநர், ரஜினிகாந்த் அவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாத அரசியல் பேசியது அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல என்பது சாதாரண குடிமகனுக்கும் தெரிந்ததாகும். ஆனால், ஐ.பி.எஸ். அண்ணாமலைக்கு இந்த அடிப்படை விசயம் புரியாமல் போனது ஏன்? .

தேர்தல் பத்திரங்கள் வழியாகவும், கார்ப்பரேட் கம்பெனிகளில் சுரண்டல்களில் பங்குபெற்றதன் வழியாகவும் பல்லாயிரம் கோடிகளை சுருட்டி அதைவைத்து தமிழ்நாட்டில் பாஜகவுக்கு உயிரூட்ட அண்ணாமலை மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் படுதோல்வியடைந்துள்ளன. இந்நிலையில் ஆளுநர் அலுவலகத்தை தங்கள் கட்சி அலுவலகமாக மாற்றுகிற முயற்சியும் பகிரங்கமானதன் விளைவே அண்ணாமலையின் ஆதங்கத்திற்கு காரணமாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த காலத்திலும் யாருக்கும் ‘பி’ டீம் ஆக இருந்ததில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ். தோன்றிய காலம் முதல் ஆங்கிலேயர்களுக்கு ‘பீ’ டீம் ஆகவும், ஆட்சிக்கு வந்த பிறகு கார்ப்பரேட்டுகளின் ‘பீ’ டீம் ஆகவும் செயல்படுவதற்காக மட்டுமே அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக. அதன் தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு கம்யூனிஸ்ட்டுகளை விமர்சிப்பதற்கு எவ்வித அருகதையும் இல்லை. மக்கள் செல்வாக்கை பெற முடியாமல் புறக்கடை வழியாக ஆளுநர் மூலம் அரசியல் செய்ய முயற்சிக்கும் பாஜகவின் எண்ணம் பகல் கனவாகவே முடியும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com