மாதவரத்தில் ஆவின் மாநில மைய ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர்

மாதவரத்தில் ரூ.8 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஆவின் மாநில மைய ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்து, ஆவின் நிறுவனத்தில் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மாதவரத்தில் ஆவின் மாநில மைய ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர்
மாதவரத்தில் ஆவின் மாநில மைய ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர்
Published on
Updated on
2 min read

மாதவரத்தில் ரூ.8 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஆவின் மாநில மைய ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்து, ஆவின் நிறுவனத்தில் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (16.8.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் (ஆவின்) சார்பில் சென்னை, மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் 8 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆவின் மாநில மைய ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் கட்டுபாட்டில் தினந்தோறும் சுமார் 43 இலட்சம் லிட்டர் பால், கிராமப்புற விவசாயிகளிடமிருந்து 10,540 பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மூலமாக அனைத்து மாவட்ட ஒன்றியங்களால் கொள்முதல் செய்யப்படுகிறது.

கொள்முதல் செய்யப்பட்ட பால், ஒன்றியங்கள் மற்றும் இணைய பால் பண்ணைகளில் சுகாதாரமான முறையில் பதப்படுத்தப்பட்டு, பால் பாக்கெட்டுகளாகவும், உபபொருட்களாகவும் தயாரிக்கப்பட்டு தமிழகமெங்கும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. உற்பத்தியின் அனைத்து நிலைகளிலும் தேவையான தரக்கட்டுப்பாட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆவின் நிறுவனம் தரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பால் மற்றும் பால் உபபொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் வழங்கி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பால் விற்பனையில் தமிழகத்தில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.

ஆவின் நிறுவனத்தால் புதியதாக பிரீமியம் மில்க் கேக், யோகர்ட் பானம் (மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெரி சுவையில்), பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ், டெய்ரி ஒய்ட்னர் போன்ற புதிய பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், பால் மற்றும் பால் பொருட்களின் தரத்தினை உறுதி செய்யும் விதமாக தேசிய பால் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சென்னை, மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் 17,422 சதுர அடி பரப்பளவில் அதிநவீன பகுப்பாய்வு கருவிகளுடன் 8 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆவின் மாநில மைய ஆய்வகக் கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

இவ்வாய்வகத்தில் உயர்தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி அனைத்து தர பரிசோதனைகளும், இந்த நவீன ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்படும். மேலும், மாவட்ட ஒன்றியங்கள் மற்றும் இணையங்களிலிருந்து பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பால் மற்றும் பால் பொருட்களின் தரத்தை ஒழுங்கு முறை ஆணையங்களின் விதிகளுக்குள் இருப்பதை உறுதி செய்வதற்கான தர பரிசோதனைகள் இந்த ஆய்வகத்தின் மூலமாக மேற்கொள்ளப்படும்.

இதன்மூலம், நுகர்வோர்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

மேலும், சேலம், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தேனி, ஈரோடு, திருவண்ணாமலை, மதுரை, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 50 பணியாளர்களின் வாரிசுதார்களுக்கு, இளநிலை செயல்பணியாளர் (அலுவலகம்), இலகுரக வாகன ஓட்டுநர், தொழில்நுட்பர் மற்றும் முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்வர், 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com