தொண்டர்களின் விருப்பப்படி அடுத்தகட்ட நடவடிக்கை
அதிமுக தொண்டர்களின் விருப்பப்படியும், தமிழக மக்களின் நலன் கருதியும் எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைவரையும் ஒருங்கிணைத்து எம்ஜிஆர், ஜெயலலிதாவைப் போல அதிமுகவை வலிமைப்படுத்துவோம். இனி, அவர்கள் தரப்பு, இவர்கள் தரப்பு என்பதெல்லாம் இல்லை. தொண்டர்கள் தரப்புதான். எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொண்டர்களின் விருப்பப்படியும், தமிழக மக்களின் நலன் கருதியும்தான் இருக்கும் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
வசந்த காலம்: முன்னதாக, ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக, சட்டத்துக்குப் புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும், தொண்டர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்திருக்கிறது.
எம்ஜிஆர் வகுத்தெடுத்த விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலர் என்றைக்கும் ஜெயலலிதாதான் என்னும் உணர்வு கொண்ட ஒன்றரை கோடி தொண்டர்களை அரவணைத்துச் செல்வேன். அதிமுகவின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும்.