ஸ்டாலின் தலைமையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: காலணி, தோல் பொருள்கள் கொள்கை வெளியீடு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற காலணிகள் மற்றும் தோல் துறை மாநாட்டில் 5 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஸ்டாலின் தலைமையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
ஸ்டாலின் தலைமையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற காலணிகள் மற்றும் தோல் துறை மாநாட்டில் 5 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022 வெளியிட்டார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (23.8.2022) சென்னையில் தொழில் துறை சார்பில் நடைபெற்ற காலணிகள் மற்றும் தோல் துறை மாநாட்டில், 5 திட்டங்களின் மூலம் 2,250 கோடி ரூபாய் முதலீட்டில், 37,450 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய்து வருகிறது. தமிழக முதல்வர் நிர்ணயித்துள்ள இலக்கான 2030-31 ஆம் நிதியாண்டிற்குள் தமிழ்நாட்டினை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியடைய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதற்கு பின்பு, இதுவரை 192 ஒப்பந்தங்கள் மூலம் மொத்தம் 2 இலட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, சுமார் 3 இலட்சத்து 2 ஆயிரத்து 200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு துறை வாரியான முதலீட்டு மாநாடுகளை மேற்கொண்டு, அத்துறைகளின் வாயிலாக முதலீடுகளை ஈர்த்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று காலணிகள் மற்றும் தோல் துறை மாநாடு நடைபெற்றது. 

இம்மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

2,250 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 37,450 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 5 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

இத்திட்டங்கள், பெரம்பலூர் மற்றும் இராணிப்பேட்டை (பனப்பாக்கம்) மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. 

தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை-2022 

முதல்வர் ஸ்டாலின், கடந்த ஏப்ரல் மாதம், தொழில் துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில், விரைவில் காலணித்துறை மற்றும் தோல் பொருட்கள் கொள்கை வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி, தமிழக முதல்வர் இன்று காலணித்துறை மற்றும் தோல் பொருட்கள் துறையில், தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-யை வெளியிட்டார்.

துறைவாரியாக, ஆய்வுகள் மேற்கொண்டு அத்துறை வளர்ச்சியை சீரான முறையில் நெறிப்படுத்தும் வகையில், துறை சார்ந்த கொள்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், தோல் அல்லாத காலணிப் பொருட்கள் துறையில் முதலீடுகளை ஈர்த்திடவும், வேலைவாய்ப்புகளை பெருமளவில் உருவாக்கிடவும், ஏற்றுமதியைப் பன்மடங்கு பெருக்கிடும் வகையிலும் இக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

காணொலிக் காட்சி வாயிலாக சர்வதேச காலணி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள் இம்மாநாட்டில், சர்வதேச காலணி உற்பத்தியாளர்கள், காலணி உற்பத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் காணொலிக் காட்சி மூலமாக, தமிழ்நாட்டில் உள்ள சந்தை நிலவரங்களையும் அதன்மூலம் உருவாகும் முதலீடு வாய்ப்புகளையும் பற்றி உரையாடினார்கள். 

இம்மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்ற நிறுவனங்கள் இங்கிலாந்து காலணி சங்கம், நைக் இந்தியா, கொலம்பியா ஸ்போர்ட்ஸ்வேர், நியூ பேலன்ஸ், காலரேஸ், கிக்கர்ஸ், பே ஹை, தைவான் ஆனிட்சுகா டைகர் மற்றும் எஸ்இஎம்எஸ் குழுமம் ஆகிய நிறுவனங்களில் இருந்து உயர் அதிகாரிகள் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com