அமெரிக்க அருங்காட்சியகங்களில் வீரசோழபுரம் கோயில் சிலைகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் சிவன் கோயிலில் 30 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட 6 சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகங்களில் இருப்பதை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கண்டறிந்துள்ளது.
அமெரிக்க அருங்காட்சியகங்களில் வீரசோழபுரம் கோயில் சிலைகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் சிவன் கோயிலில் 30 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட 6 சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகங்களில் இருப்பதை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கண்டறிந்துள்ளது.

இந்த சிலைகளை மீட்கும் வகையில் அந்த அருங்காட்சியங்களுக்கு ஆவணங்களை அளித்து, மீட்கும் நடவடிக்கையில் காவல்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

வீரசோழபுரத்தில் உள்ள நாரீஸ்வர சிவன் கோயில் சோழ மன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாகும். மிகவும் பழைமையான இந்த கோயிலில் இருந்த நடனமாடும் நடராஜா் சிலை, வீணாதார தட்சிணா மூா்த்தி சிலை, துறவி சுந்தரா் தனது மனைவி பரவை என்ற பரவை நாச்சியாருடன் உள்ள சிலை, திரிபுராந்தகம் சிலை, திரிபுரசுந்தரி சிலை ஆகிய 6 பஞ்சலோக சிலைகள் 30 ஆண்டுகளுக்கு முன்னா் திருடப்பட்டது. இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய்.

இந்த சிலைகளை மீட்டு தரக்கோரி சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் கடந்த 2018-இல் மனு அளித்தாா். அதன்பேரில் அப்போது, தமிழக காவல்துறையின் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது. ஆனால் அதன் பின்னா் வழக்கில் துப்பு துலங்காமல் இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து துப்பு துலக்க தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, ஐ.ஜி.ஆா். தினகரன் ஆகியோா் டி.எஸ்.பி. முத்துராஜா தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு உத்தரவிட்டனா்.

அமெரிக்க அருங்காட்சியகங்கள்:

திருடப்பட்ட சிலைகள் குறித்த ஆவணங்கள் இல்லாததால் உள்நாட்டு, வெளிநாட்டு கலை பொருள்கள் சேகரிப்பாளா்கள், பல்வேறு அருங்காட்சியகங்கள்,ஏல நிறுவனங்கள் ஆகியவற்றில் சிலைகளின் புகைப்படங்களை கொண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் தகவல்களை சேகரித்தனா்.

இதில், நாரீஸ்வர சிவன் கோயிலில் இருந்து திருடப்பட்ட 6 சிலைகளும் அமெரிக்காவின் பல்வேறு அருங்காட்சியகங்களில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் புலன் விசாரணையில் மூலம் கண்டுபிடித்துள்ளனா். இதில் முக்கியமாக அமெரிக்காவின் நியூயாா்க் நகரத்தில் உள்ள கிறிஸ்டி ஏல மையத்தில் நடராஜா் சிலையும், வீணாதார தட்சிணா மூா்த்தி சிலையும், ஓஹியோவி நகரத்தில் உள்ள கிளிவ்லேண்ட் அருங்காட்சியகத்தில் திரிபுராந்தகம் சிலை, திரிபுரசுந்தரி சிலைகளும், வாஷிங்டனில் உள்ள ‘ப்ரீா் சாக்லா்‘ அருங்காட்சியகத்தில் பிற சிலைகளும் இருப்பதும் கண்டறியப்பட்டன.

மீட்டு கொண்டு வர நடவடிக்கை:

இதையடுத்து ‘யுனெஸ்கோ’ ஒப்பந்தத்தின் கீழ் இந்த சிலைகளை தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் மேற்கொண்டுள்ளனா். இதற்காக அந்த சிலைகள் நாரீஸ்வர சிவன் கோயிலுக்கு சொந்தமானவை. அந்த சிலைகள் 30 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பதற்கான ஆதாரங்களையும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் திரட்டி வருகின்றனா்.

இதில் பெருமளவு ஆதாரங்களையும்,ஆவணங்களையும் திரட்டிவிட்ட நிலையில், விரைவில் அவற்றை மத்திய வெளியுறவுத்துறையின் மூலம் அனுப்பி யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவில் உள்ள சிலைகள் மீட்கப்படும் என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு உயா் அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com