அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம்: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனம் செய்யும் தமிழ்நாடு அரசின் முடிவிற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம்: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு



அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனம் செய்யும் தமிழ்நாடு அரசின் முடிவிற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அர்ச்சகர் பயிற்சியை முடித்த அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக செய்யும் தமிழ்நாடு அரசின் முடிவிற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு அரசின் முடிவிற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகக் கோயில்களில் அர்ச்சர்கர்கள் மற்றும் பூசாரிகள் நியமிப்பது தொடர்பாக 2020 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை புதிய விதிகளை வெளியிட்டது. அதன்படி ஆகமப் பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி பெற்ற, பதினெட்டு வயது முதல் முப்பதைந்து வயதுக்கு உள்பட்ட நபரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆதிசைவ சிவாசார்யர்கள் சேவா சங்கம் மற்றும் சில தனிநபர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அர்ச்சகர் நியமனம் தொடர்பான இந்த வழக்கு நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என 2021 அக்டோபர் மாதம் தெரிவித்தது. அதன்பின்னர், இந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது எதிர்தரப்பில், கோயில்களுக்குப் பரம்பரை அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில், தக்கார்கள் மூலம் அரசே அர்ச்சகர்களை நியமிப்பது சட்ட விரோதமானது என்று வாதிட்டனர். அறங்காவலர்கள் மட்டுமே அர்ச்சகர்களை நியமிக்க முடியும் என்று வாதம் செய்தனர். 

மேலும், ஆகம விதிகளின் படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும் அதை மீறி அர்ச்சகர் பயிற்சியை முடித்த அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கக் கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கு அரசுத் தரப்பு அளித்த பதிலில், உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்து, அதன் பிறகே ஒரு ஆண்டு பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டதாக பதில் மனு தாக்கல் செய்தது. 

மேலும், சிவாச்சார்யர்கள் வழக்கில், ஆகம விதிகள் கற்றவர்கள் அர்ச்சகர் ஆகலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளதையும் சுட்டிக் காட்டி வாதிடட்டது.

இந்நிலையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் வழக்கில் அரசு வெளியிட்ட விதிகள் செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதேவேளை ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஆகம விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்டறிய ஐந்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. 

இதுபோல் உச்ச நீதிமன்றத்திலும் இது தொடர்பாக பல்வேறு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் பாஜக மூத்தத் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தரப்பு மனுவும் ஒன்று. அந்த மனுவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற விவகாரத்தில் புதியதாக அர்ச்சகர்களை நியமிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே பணியில் இருப்பவர்களை இடை நீக்கம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த மனு திங்கள்கிழமை உச்ச நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, தமிழ்நாடு அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கும் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தது. 

மேலும், சுப்பிரமணியன் சுவாமி மனு மீது பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. 

மேலும், நிலுவையில் உள்ள ரிட் மனுக்களுடன் சுப்பிரமணியன் சுவாமி ரிட் மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com