
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் சொத்து பிரிக்கும் தகராறில் குடும்பத்துடன் டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற அழகேசன் குடும்பத்தினர்.
திருவள்ளூர்: சொத்து பிரித்து தருவதில் சகோதரர்கள் தாமதம் செய்வதாகவும், காவல் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லையெனக் கூறி குடும்பத்துடன் டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் அருகே வெங்கல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தாமரைப்பாக்கம் கூட்ரோடு அம்மணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன்(48). இவரது மனைவி புஷ்பலதா(45). இவர்களது மகள் தியா(11), மகன் சாய்நாத்(7) ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில் அழகேசனின் உடன் பிறந்த சகோதரர்கள் சொத்தை பிரித்து தருவதில் தாமதம் செய்து வருவதாகவும், இதுதொடர்பாக வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதால் அழகேசன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்காக திங்கள்கிழமை வந்தனர்.
இதையும் படிக்க | அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம்: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
அப்போது, ஆட்சியர் அலுவலகம் முன்பு மறைத்து வைத்து கேனில் கொண்டு வந்த டீசலை திடீரென குடும்பத்துடன் தாங்களே ஊற்றிக் கொண்டு, சொத்தை பிரித்து தர மறுக்கும் சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றார்.
உடனே அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து அழகேசன் குடும்பத்தினரை காப்பாற்றினர்.
அதைத் தொடர்ந்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனர். அங்கு தீக்குளிக்க முயற்சித்தவர்களிடம் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முழு விவரங்களை கேட்டறிந்தார்.
அப்போது, திடீரென ஆட்சியரின் காலில் விழுந்து உடன் பிறந்த சகோதரர்கள் சொத்து பிரித்து தராமல் ஏமாற்றுவதாகவும், சொத்தை பிரித்து வழங்குமாறும் கோரிக்கை வைத்தனர். கட்டாயம் உங்களுக்கான சொத்து கிடைக்க ஏற்பாடு செய்வதாக ஆட்சியர் உறுதி அளித்தார்.
அதைத் தொடர்ந்து திருவள்ளூர் நகர் காவல் நிலையத்திற்கு தீக்குளிக்க முயற்சித்த குடும்பத்தினரை போலீசார் அழைத்துச் சென்றனர். எனவே ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.