வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்: திரளானோர் பங்கேற்பு

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா திருக்கொடியேற்றம் திங்கள்கிழமை மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா


நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா திருக்கொடியேற்றம் திங்கள்கிழமை மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், அற்புதங்களின் உறைவிடமாக, உலகப் புகழ் பெற்ற கிறிஸ்துவ பேராலயங்களில் ஒன்றாக விளங்குகிறது. பசலிக்கா அந்தஸ்து பெற்ற இத்தலம்,  கீழை நாடுகளின் லூர்து எனவும் போற்றப்படுகிறது. 

இந்தப் பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா 2022-ன் தொடக்கமாக ஆண்டுப் பெருவிழா திருக்கொடியேற்றம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக,  புனித ஆரோக்கிய அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடி ஊர்வலமும், அதற்கு முன்பாக தேர் பவனியும் நடைபெற்றது. உற்சாகமான முழக்கங்களுடன் நடைபெற்ற இந்த ஊர்வலம், கடற்கரை சாலை, ஆர்யநாட்டுத் தெரு, கடைவீதி வழியே பேராலய வளாகத்தை வந்தடைந்தது.

பின்னர்,  தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் எம். தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில், திருக்கொடியைப் புனிதம் செய்விக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாரம்பரிய முறைப்படியான வழிபாடுகளை நடத்தி அவர், கொடியைப் புனிதம் செய்வித்தார். பேராலய அதிபர் சி. இருதயராஜ், பங்குத் தந்தை எஸ். அற்புதராஜ் ஆகியோர் உடனிருந்து வழிபாடுகளை நிறைவேற்றினர். 

இதைத் தொடர்ந்து, மாலை சுமார் 6.40 மணிக்கு வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா திருக்கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது,  வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் குழுமியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஆவே மரியே! மரியே வாழ்க! என விண்ணதிரும் வகையில் பக்தி முழக்கங்களை எழுப்பினர்.

கொடியேற்றத்தின்போது கண்கவர் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. பேராலயம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகள் முழுமையும் வண்ண மின் விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டன. வண்ண பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன. 

நாகை மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ், தஞ்சை சரக காவல் துறைத் துணைத் தலைவர் ஏ. கயல்விழி, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஐ. லியோனி, உதவி பங்குத் தந்தையர் ஆண்டோ ஜேசுராஜ், டேவிட் தன்ராஜ், வேளாங்கண்ணி பேரூராட்சித் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் உதவிப் பங்குத் தந்தையர்கள், குருக்கள்கள் கலந்து கொண்டனர்.

லட்சக்கணக்கானோர் பங்கேற்பு...

கரோனா தொற்றுப் பரவல் மற்றும் அதைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. 2 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டில், ஆண்டுப் பெருவிழா நிகழ்வுகளில் பங்கேற்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பல்லாயிரக்கணக்கானோர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாத யாத்திரையாக வந்திருந்தனர்.

இதனால், நாகை - வேளாங்கண்ணி கிழக்குக் கடற்கரை சாலையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல, தெற்குப்பொய்கைநல்லூர் வழியேயான நாகை - வேளாங்கண்ணி சாலையிலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இந்தச் சாலைகளில் பல இடங்களில் போலீஸார் கண்காணிப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர். 

தஞ்சை கரக காவல் துறை துணைத் தலைவர் கயல்விழி உத்தரவின் பேரில், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கு. ஜவஹர் மேற்பார்வையில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 23 இடங்களில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைத்தும், 90 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். 

பக்தர்களுக்கு உதவும் வகையில் பல இடங்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கடலில் குளிக்கும் பக்தர்களை நெறிப்படுத்தும் பணியில் கடலோரக் காவல் குழும போலீஸார் ஈடுபட்டிருந்தனர். ஆண்டுப் பெருவிழாவுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் பணியை, தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழக தொழில்நுட்பக் குழுவினர் மேற்கொண்டனர். 

அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகளும்,  தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்களும் வேளாங்கண்ணி மற்றும் நாகைக்கு இயக்கப்பட்டன. 
 
வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பேராலய நிர்வாகம் சார்பில் சுகாதாரப் பராமரிப்பு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com