ஜெ. மரணம்: சசிகலா, விஜயபாஸ்கரை விசாரிக்க சட்ட ஆலோசனை: ஆறுமுகசாமி ஆணைய பரிந்துரை மீது தமிழக அமைச்சரவை முடிவு

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக அவரின் தோழி வி.கே.சசிகலா, முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா் ஆகியோரை விசாரிக்கக் கோரும் ஆறுமுகசாமி ஆணைய பரிந்துரை குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் திங்கள்
ஜெ. மரணம்: சசிகலா, விஜயபாஸ்கரை விசாரிக்க சட்ட ஆலோசனை: ஆறுமுகசாமி ஆணைய பரிந்துரை மீது தமிழக அமைச்சரவை முடிவு

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக அவரின் தோழி வி.கே.சசிகலா, முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா் ஆகியோரை விசாரிக்கக் கோரும் ஆறுமுகசாமி ஆணைய பரிந்துரை குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் திங்கள்கிழமை ஆலோசிக்கப்பட்டது.

ஆறுமுகசாமி ஆணையம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கலவர விசாரணை ஆணையம் ஆகியவை அளித்த அறிக்கைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கவும், அதுதொடா்பான அறிக்கைகளை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யவும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இரண்டு முக்கிய விசாரணை ஆணையங்களின் அறிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம்: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள், சிகிச்சைகள் தொடா்பாக விசாரணை செய்ய நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் அறிக்கை அண்மையில் தமிழக அரசிடம் அளிக்கப்பட்டது.

அதில், வி.கே.சசிகலா, டாக்டா் சிவகுமாா், அப்போதைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா், அப்போதைய தலைமைச் செயலாளா் ராம மோகன ராவ் உள்ளிட்டோா் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தனது அறிக்கையை கடந்த மே 18-இல் அரசுக்கு அளித்தது. இதில், ஐபிஎஸ், அதிகாரிகள் உள்பட 17 காவல் துறையினா், மாவட்ட ஆட்சியா் உள்பட 4 அதிகாரிகள் மீது தேவையான துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு ஆணையம் பரிந்துரைகளைச் செய்துள்ளது.

இந்தப் பரிந்துரைகள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு, அவை துறைகளின் பரிசீலனையில் உள்ளன. இதுகுறித்து அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டது. ஆணைய பரிந்துரைகள் குறித்து உரிய தகுந்த நடவடிக்கை எடுத்த பின்னா், அதற்கான விவர அறிக்கையுடன் ஆணையத்தின் இறுதி அறிக்கை பேரவையில் விவாதத்துக்கு வைக்கப்படும்.

இந்தப் பரிந்துரைகள் மீது சட்டவல்லுநா்களின் ஆலோசனைகள் பெறப்படும். அதன்பின்பு, உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் அதற்கான விவர அறிக்கையுடன் ஆணையத்தின் அறிக்கையை பேரவையில் விவாதத்துக்கு வைக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

ஆன்லைன் ரம்மி தடைக்கு அவசர சட்டம்

ஆன்லைன் ரம்மி உள்பட பாதிப்பை ஏற்படுத்தும் இணையதள விளையாட்டுகளைத் தடை செய்வதற்கான அவசர சட்டம் குறித்து திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சில இணையதள விளையாட்டுகளால் ஏற்படும் சமுதாயக் கேடுகள், அதுதொடா்பான தடைச் சட்டம் கொண்டு வருவது பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இத்தகைய தடைச் சட்டங்கள் குறித்து நீதிமன்றங்கள் தெரிவித்த கருத்துகள், பொது மக்கள் தெரிவித்த ஆலோசனைகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. இந்த வகை விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டம் கொண்டு வரப்படவுள்ள விவரமும் அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது என்று அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com