தென்காசியில் திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்

தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தென்காசியில் திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்
தென்காசியில் திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.238.90  கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.22.20 கோடி செலவில் 57 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.34.14 கோடி மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,03,508 பயனாளிகளுக்கு ரூ.182.56 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், தேனி, திண்டுக்கல், நீலகிரி, வேலூர், இராணிப்பேட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

முதலமைச்சராக பதவியேற்றப் பிறகு முதன்முறையாக  மு.க.ஸ்டாலின்  நேற்றிரவு சென்னையிலிருந்து தென்காசிக்கு இரயில் மூலம் பயணம் மேற்கொண்டார்.  தென்காசி மாவட்டத்தில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்றடைந்த முதல்வருக்கு தென்காசி இரயில் நிலையத்தில் அமைச்சர்கள்,  நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பெரியோர்கள், தாய்மார்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இன்று காலை தென்காசி இரயில் நிலையத்திலிருந்து விருந்தினர் மாளிகை செல்லும் வழியில் முதல்வர் ஸ்டாலின்,  திரண்டிருந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அவர்களது உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

இன்றைய தினம் தென்காசியில் நடைபெற்ற மாபெரும் அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின், இம்மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். 

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் செங்கோட்டையில் 70 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மண்பரிசோதனைக்கூடம்; வேளாண்மை பொறியியல் துறை  சார்பில்  ஊத்துமலை, வீரகேரளம்புதூர், ஆழ்வார்குறிச்சி ஆகிய இடங்களில் 1 கோடியே 16 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள  துணை  வேளாண்மை  விரிவாக்க மையங்கள்; மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் வல்லத்தில் 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலைய புற நோயாளிகள் பகுதி, கம்பனேரி மற்றும் மடத்துப்பட்டி பகுதிகளில் 40 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையங்கள், ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள செவிலியர் குடியிருப்பு;

வனத்துறை சார்பில் புளியங்குடி தலையணை வனப்பகுதியில் வனத்தீ ஏற்படாமல் தடுக்க 3 இலட்சம் ரூபாய் செலவில் தடுப்பணை;

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடையநல்லூர் நகராட்சியில் 40 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நவீன மீன் விற்பனை அங்காடி;

சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் மத்தளம்பாறை, ஐந்தாம் கட்டளை மற்றும் நடுவக்குறிச்சி ஆகிய கிராமங்களில் 32 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மையக் கட்டடங்கள்;

என மொத்தம் 22 கோடியே 20 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 57 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மேலும், இவ்விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தென்காசி அரசு மாவட்ட மருத்துவமனையில் 30 கோடியே 2 இலட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில்  மகப்பேறு மையம், தாய்சேய் நலக் கட்டடம், சிறார் திறன் மேம்பாட்டு மையம் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள்;

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த  குழந்தைகள்  வளர்ச்சி  திட்டத்தின் சார்பில் கடையநல்லூர் வட்டாரத்தில் குமந்தாபுரம் உள்ளிட்ட 5  இடங்களில் 37 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக் கட்டடங்கள்;

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் புளியங்குடி நகராட்சி பகுதியில் 1 கோடியே 44 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி;

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் சார்பில் பாவூர்ச்சத்திரத்தில் 72 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாட்டிலுள்ள  நாட்டின நாய்களுக்கான இனப்பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம்;

என மொத்தம் 34 கோடியே 14 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப் பணிகளுக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
 

இவ்விழாவில், முதல்வர் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை  சார்பில் 11,996  பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், இ-பட்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள், சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 6246  பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 3500 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதிய அட்டைகள், புதிய தலைமுறை தொலைக்காட்சி  அலுவலக செய்திப் பிரிவில் செய்தியாளராக பணியாற்றி வந்த ச.முத்துகிருஷ்ணன் என்பவர் உயிரிழந்ததையொட்டி அவரது தாயாரிடம் பத்திரிகையாளர் குடும்ப உதவி திட்டத்தின் கீழ் 3 இலட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 2 இலட்சம் ரூபாய், என மொத்தம் 5 இலட்சம் ரூபாய் நிவாரணத்தொகை என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 1,03,508 பயனாளிகளுக்கு 182 கோடியே 56 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com