இந்து அறநிலையத்துறை அலுவலர்களுக்கு ரூ.1.56 கோடியில் புதிய வாகனங்கள்: முதல்வர் வழங்கினார்!

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 19 புதிய வாகனங்களை வழங்கினார்.
இந்து அறநிலையத்துறை அலுவலர்களுக்கு ரூ.1.56 கோடியில் புதிய வாகனங்கள்: முதல்வர் வழங்கினார்!


இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 13 திருக்கோயில்களில் ரூ.56.18 கோடி மதிப்பீட்டிலான 16  புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 19 புதிய வாகனங்களை வழங்கினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.56 கோடியே 18 லட்சம்  மதிப்பீட்டில் 13 திருக்கோயில்களில் இராஜகோபுரங்கள், மகா மண்டபம், திருமண மண்டபங்கள், அர்ச்சகர் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு, வணிக வளாகம்,  மலைப் பாதை சீரமைத்தல், மதிற்சுவர் கட்டுதல், ஒருங்கிணைந்த மண்டல இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்கள் கட்டுதல் போன்ற 16 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப்  பணிகளை காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். மேலும், அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 1 கோடியே 56 இலட்சத்து 41 ஆயிரத்து 237 ரூபாய் மதிப்பிலான 19 புதிய வாகனங்களை வழங்கினார்.

இந்து சமய அறநிலையத்துறை மூலம் 400-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு, தொன்மை வாய்ந்த திருக்கோயில்களில் திருப்பணிகள், திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல்,  பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், கோரகுட்டை, அருள்மிகு இளையபெருமாள் வெங்கட்ரமணசுவாமி திருக்கோயிலில் 6.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏழு நிலை ராஜகோபுரம் கட்டும் பணி,  திருப்பூர் மாவட்டம், அய்யம்பாளையம், அருள்மிகு வாழைத் தோட்டத்து அய்யன் திருக்கோயிலில் ரூ. 2.10 கோடி மதிப்பீட்டில் அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி, சிவன்மலை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ. 2.23 கோடி மதிப்பீட்டில் திருக்கோயில் மலைப்பாதையை சீரமைக்கும் பணி, ஊத்துக்குளி, அருள்மிகு வெற்றி வேலாயுத சுவாமி திருக்கோயிலில் 2.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வடக்கு சுற்றுப் பிரகார மண்டபம் அமைக்கும் பணி,

சென்னை, அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் ரூ. 3.20 கோடி மதிப்பீட்டில் அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி மற்றும் 1.01 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம், அருள்மிகு ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்திற்கு ரூ.10.44 கோடி மதிப்பீட்டில் மதிற்சுவர் கட்டும் பணி;

தஞ்சாவூர் மாவட்டம், கண்டமங்கலம், அருள்மிகு வாத்தலை நாச்சியம்மன் திருக்கோயிலில் ரூ. 3.80 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி, நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினத்தில் ரூ.4.18 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி, சிக்கல், அருள்மிகு நவநீதேஸ்வரசுவாமி திருக்கோயிலில் ரூ.3.65 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி, வெளிப்பாளையம், அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி,

மயிலாடுதுறை மாவட்டம், திருப்புங்கூர், அருள்மிகு சிவலோகநாத சுவாமி திருக்கோயிலில் ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி, திருவண்ணாமலை மாவட்டம், புதூர் செங்கம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ரூ.1.36 கோடி மதிப்பீட்டில் பிரகார மண்டபம் மற்றும் கருங்கல் தரைதளம் அமைக்கும் பணி,

வேலூர் மாவட்டம், வேலூரில் ரூ.2.96 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி, திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர், அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய மகா மண்டபம் கட்டும் பணி, கடலூர் மாவட்டம், திருவந்திபுரம், அருள்மிகு தேவநாத சுவாமி திருக்கோயிலில் ரூ. 2.80 கோடி மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணி;

என மொத்தம் ரூ.56.18 கோடி மதிப்பீட்டிலான திருக்கோயில்களின் புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப்  பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தொடங்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், "துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்கு 108 புதிய ஊர்திகள் ரூ.8 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும்" என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் கட்டடங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டல், திருக்கோயில்களுக்கு சொந்தமான அசையா சொத்துகளை கண்டறிந்து அளவீடு செய்தல், திருக்கோயில்களின் திருப்பணிகளை பார்வையிட்டு விரைந்து பணிகளை முடிக்க செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு வாகன வசதிகள் ஏற்படுத்தி தரும் வகையில், முதற்கட்டமாக ரூ. 5 கோடியே 8 லட்சம் செலவில் 69 புதிய வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, 4.4.2022 அன்று முதல்வர் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வாகனங்கள் வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக ரூ.1 கோடியே 56 இலட்சத்து 41 ஆயிரத்து 237 செலவில் 19 புதிய வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் விதமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி,  இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com