ஆரூரான் சர்க்கரை ஆலையில் பெரும் மோசடி-விவசாயிகள் பாதிப்பு: முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்!

திரு ஆரூரான் சர்க்கரை ஆலையில் நடந்துள்ள பெரும் மோசடியால் விவசாயிகள் கடுமையாக பாதிப்புக்கப்பட்டுள்ளதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாகத் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும்
இரா.முத்தரசன்
இரா.முத்தரசன்
Published on
Updated on
1 min read


திரு ஆரூரான் சர்க்கரை ஆலையில் நடந்துள்ள பெரும் மோசடியால் விவசாயிகள் கடுமையாக பாதிப்புக்கப்பட்டுள்ளதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாகத் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம், திருமுண்டங்குடியில் இயங்கி வந்த திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் பெரும் நிதி மோசடி ஈடுபட்டுட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கடந்த நான்காண்டு காலமாக செயல்படாமல் உள்ளது. ஆலை விரிவாக்கம் - விவசாயிகள் வழங்கிய கரும்புக்கு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகை, வங்கியில் பெற்ற கடன் உள்ளிட்ட சட்டப்பூர்வ பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல், ஆலை வேறொரு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆலையை விலைக்கு வாங்கியுள்ள புதிய நிர்வாகம், ஆலையில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண முன்வரவில்லை. விவசாயிகள் ஆலைக்கு வழங்கிய கரும்பிற்கான தொகை பெருமளவில் பாக்கியுள்ளது.

மேலும், விவசாயிகள் பெயரில் நிர்வாகம் வங்கியில் பெற்ற கடன் தொகை ஏறத்தாழ ரூ.300 கோடியை திருப்பிச் செலுத்தவில்லை. ஆனால், நிர்வாகம் விவசாயிகள் பெயரில் கடன் தொகையை பெற்றுக் கொண்டது. விவசாயிகள் கடனை திரும்ப செலுத்துமாறு அரசு நோட்டீஸ் அனுப்பி, அச்சுறுத்தியும், மிரட்டியும் வருகின்றது.

கடன் பெறாத அப்பாவி விவசாயிகள் கடன் பெற்றதாக மிகப்பெரும் மோசடி செய்துள்ள திரு அரூரான் சர்க்கரை நிர்வாகமும், வங்கி அதிகாரிகளும் கூட்டாக ரூ.300 கோடி கொள்ளையடித்துள்ளனர். இது குறித்து விரிவான நீதி விசாரணை மேற்கொள்ளப்பட்டு மோசடி செய்த குற்றவாளிகள் மீது சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

ஆலையை நம்பி கரும்பு பயிரிட்டு, வழங்கி வரும் 15,000-ம் விவசாயிகள் குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிப் போயுள்ள துயரநிலைக்கு அரசு தீர்வு காண வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைத்து கட்சி மற்றும் விவசாய சங்கங்களின் முழு ஒத்துழைப்புடன், ஆதரவுடன் கடந்த இருபது நாட்களுக்கு மேலாக போராட்டங்களை  தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட முத்தரப்பு கூட்டங்களால் தீர்வு எதுவும் காண  முடியவில்லை. எனவே, திரு ஆரூரான் சர்க்கரை ஆலை பிரச்னையில் முதல்வர் நேரடியாகத்  தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என முத்தரசன் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com