
தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளை கண்காணிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சீனா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில வாரங்களாக கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வருகின்றது. இதனால் பல்வேறு இடங்களில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனாவில் பரவி வரும் பிஎஃப் 7 மற்றும் பிஎஃப் 12 என்ற ஒமைக்ரான் திரிபு வகை கரோனா குஜராத் மற்றும் ஒடிஸா மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று முக்கிய ஆலோசனை நடத்திய பின்னர், முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது உள்ளிட்ட தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மீண்டும் கரோனா அச்சுறுத்தல்: பிரதமர் மோடி இன்று ஆலோசனை
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகள் அனைவரையும் பரிசோதித்து, அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்தவும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் சற்றுநேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.