சென்னை: காளையார்கோவில் போரை முன்வைத்து எழுத்தாளர் மு. ராஜேந்திரன் எழுதிய காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
1801-ஆம் ஆண்டு ஆறு மாதங்கள் நடைபெற்ற காளையார்கோவில் போரை முன் வைத்து எழுதப்பட்ட நாவல் காலா பாணி.
சொந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு முகம் தெரியாத தீவில் இறக்கிவிடப்படுவதுதான் காலா பாணி. எழுத்தாளர் மு. ராஜேந்திரன் எழுதிய காலா பாணி, நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை.
எழுத்தாளர் மு. ராஜேந்திரன்
எழுத்தாளர் டாக்டர் மு. ராஜேந்திரன் மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகே வடகரை கிராமத்தில் பிறந்தவர். முதுகலை ஆங்கில இலக்கியமும் சட்டமும் படித்தவர். ஐஏஎஸ் தேர்வில் வரலாற்றை ஒரு பாடமாக எடுத்துப் படித்த போது, வரலாறு மீதே அவரது ஆர்வம் திரும்பியது.
1998ஆம் ஆண்டு நடைபெற்ற தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முதல் பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மாணவர். இவர் எழுதிய பிற நூல்கள், சோழல் காலச் செப்பேடுகள், பாண்டியர் காலச் செப்பேடுகள், சேரர் காலச் செப்பேடுகள், பல்லவர் காலச் செப்பேடுகள், சட்ட வல்லுநர் திருவள்ளுவர், வடகரை - ஒரு வம்சத்தின் வரலாறு (தன் வரலாற்று நாவல்), பாதாளி, 1801 முதலியவை.
'காலா பாணி' நாவல்
சொந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு முகம் தெரியாத தீவில் இறக்கிவிடப்படுவதுதான் காலா பாணி. நூலாசிரியர் ராஜேந்திரனின் இந்த "காலா பாணி', நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை.
1801- இல் சுமார் ஆறு மாதங்கள் நடந்த காளையார்கோவில் போரை நாட்டின் முதல் சுதந்திரப் போர் என நிறுவ முடிந்தாலும்கூட இன்னமும் உரிய இடம் அல்லது பெருமை அதற்கு வழங்கப்படவில்லை.
இதையும் படிக்க: எழுத்தாளர் கே.நல்லதம்பிக்கு சாகித்ய அகாதெமி விருது
காளையார்கோவில் போரை முன்வைத்து ஆசிரியர் எழுதிய "1801' நாவலின் தொடர்ச்சி அல்லது அதன் ஒரு பகுதிதான் "காலா பாணி' நாவல் என்று கொள்ளலாம். இரு நூறு ஆண்டுகளுக்கு முன் சிவகங்கை மன்னரும், நாட்டின் முதல் புரட்சித் திலகம் வேலு நாச்சியாரின் மருமகனுமான வேங்கை பெரிய உடையணத் தேவன் மற்றும் அவர் கூட்டாளிகள் 72 பேர் நாடு கடத்தப்பட்ட கதைதான் இந்த நாவல்.
பெரிய உடையணத் தேவன் கைது செய்யப்பட்டதில் தொடங்கி, திருமயம் கோட்டையிலிருந்து தூத்துக்குடிக்குக் கொண்டு செல்லப்பட்டு, துறைமுகத்தில் கப்பலேற்றி, பினாங்கிற்குக் கடத்தப்பட்டு, அங்கே அவர்கள் மாண்ட துயரக் கதையைச் சிறப்பாக எழுதிச் செல்கிறார் ஆசிரியர். வேங்கை உடையணத் தேவனும் குழுவும் நாடு கடத்தப்பட, அவருடைய உறவுகள் படும்பாடுகள் எழுதப்பட்டுள்ள விதம் சிறப்பு.
கடலுக்கு அப்பால் நடந்த கதையின் சில பகுதிகள் மட்டும் வரலாறும் புனைவுமாகக் கலந்திருக்கும். நாவலாசிரியர் நாவல் சம்பந்தப்பட்ட வரலாற்றிடங்களை எல்லாம் நேரில் சென்று பார்த்து நாவலைச் செறிவூட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாவல் செல்லும் தடத்திலேயே அன்றைய தமிழகத்தின், தமிழர்களின் வாழ்க்கைச் சூழல், பிரிட்டிஷாரின் நடத்தைகள் மற்றும் அணுகுமுறைகள் என பிறவற்றையும் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர்.