மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

மத்திய நிதிநிலை அறிக்கை வழக்கமான நிதிநிலை அறிக்கையாகவே அமைந்திருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

மத்திய நிதிநிலை அறிக்கை வழக்கமான நிதிநிலை அறிக்கையாகவே அமைந்திருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வார்த்தை அலங்காரங்கள் நிறைந்த ஒன்றிய பாஜக  அரசின் வழக்கமான நிதிநிலை அறிக்கையாகவே இந்த 2022-23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையும் அமைந்திருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “தனிநபர் வருமான வரி விகிதத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை, மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த உழவர்களுக்கு நலத்திட்டங்கள் இல்லை, தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசிடம் கோரிய திட்டங்களுக்கு நிதியுதவி இல்லை. குறிப்பாக தமிழ்நாட்டிற்கான புதிய ரயில் திட்டங்களும் இல்லை, மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கு கோரிய நிவாரண நிதி ஒதுக்கீடும் இல்லை என ஒரு நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்திருப்பது தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து கோதாவரி – பெண்ணாறு - காவிரி நதி நீர் திட்டத்தின் விரிவான அறிக்கை மட்டுமே தயார் என்ற அறிவிப்பு இருப்பது ஆறுதல் அளித்தாலும் - அறிவிப்பினை செயல்படுத்த முதல்கட்ட நிதி ஒதுக்கீட்டினைக்கூட நிதிநிலை அறிக்கையில் காண முடியவில்லை என்பது கவலையளிக்கிறது. ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்பட்ட இராணுவ பெருவழித் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பதால் - இத்துறையிலும் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தினைப் பேரூராட்சிப் பகுதிகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீட்டினை 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் குறைத்திருப்பது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டத்தை முடக்குவதற்கான முயற்சியாக மட்டும் தெரியவில்லை; அடித்தட்டு மக்களின் கையில் ஒரு பைசா கூட இருக்கக் கூடாது என்ற எண்ணவோட்டத்தையே வெளிப்படுத்துகிறது.

மேலும்  5 மாநிலத் தேர்தல் நடைபெறும் சூழலில் தங்களுக்கு ஏதாவது நல்ல அறிவிப்பு கிடைக்காதா என ஏங்கித் தவித்த மக்களின் எதிர்பார்ப்பைப் புறக்கணித்து - மக்களைப்பற்றி சிந்திக்காத இந்த நிதிநிலை அறிக்கையை “மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை”என்று அடைமொழியிட்டு அழைப்பதே முற்றிலும் பொருத்தமானது என அந்த அறிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com