'நீட் தேர்வு மாணவர்களை கொல்லக்கூடிய பலிபீடம்' - முதல்வர் பேச்சு

நீட் தேர்வு மாணவர்களை கொல்லக்கூடிய தேர்வு; அது ஒரு  பலிபீடம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் பேசியுள்ளார். 
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

நீட் தேர்வு மாணவர்களை கொல்லக்கூடிய தேர்வு; அது ஒரு  பலிபீடம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் பேசியுள்ளார். 

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி, சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பிய நிலையில், நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை கூடியது.

கூட்டத்தில், நீட் விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். பின்னர் மசோதா மீது விவாதம் நடைபெற்று வருகிறது. 

அப்போது, நீட் விலக்கு மசோதா மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:

நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பதற்காக மட்டும் நாம் இங்கு கூடவில்லை; கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்டவும் கூடியிருக்கிறோம். ஜனநாயகம் காக்க, கல்வி உரிமையை வென்றெடுக்க, கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட நாம் இன்று கூடியிருக்கிறோம்.

அந்தகவையில், எனது பொதுவாழ்வில் மறக்கமுடியாத நாளாக இந்நாள் அமைந்துள்ளது. நீட் என்ற சமூக அநீதியை அகற்ற இந்த சட்டப்பேரவையால் முடியும். 

திமுக ஆட்சிப்பொறுப்பேற்று 8 மாதத்துக்குள் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை கூடியிருக்கிறோம். 1968ல் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்டி இருமொழிக்கொள்கை நிறைவேற்றினார் அண்ணா. 

நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும். 8 கோடி மக்களை பிரதிபலிக்க கூடிய இந்த சட்டப்பேரவையில் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டும்.   

நீட் தேர்வு ஒன்றும் அரசியலமைப்பு விதிப்படி உருவாக்கப்பட்டது அல்ல. நீட் தேர்வு கொண்டுவரப்பட்டபோது, 115 வழக்குகள் போடப்பட்டது, அதில் தமிழகம் தான் முதன்மை மாநிலம். 

அதன்படி, நீட் தேர்வு அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று உச்சநீதிமன்றம் கூறியது. இதனால், தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால், பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்றபிறகு 2016ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பை மாற்றி வழங்கியது. இதனபின்னர் நீட் தேர்வை பாஜக அரசு அமல்படுத்தியது. நீட் தேர்வு முழுக்கமுழுக்க தனியார் நிறுவனங்களுக்கு சாதகமானது. இதற்காக லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கின்றனர். தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்டது என்று சொல்லாம். 

நீட் தேர்வு மாணவர்களிடையே மருத்துவக் கனவில் தடுப்புச் சுவரை எழுப்புகிறது, உனக்கு தகுதி இல்லை என்று தடுக்கிறது. 

நீட் தேர்வில் முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 2019 தேர்வில் 4 பேர், 2020ல் 5 பேர், 2021ல் 15 பேர் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ராஜஸ்தான், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நீட் தேர்வு முறைகேடு வழக்கு போடப்பட்டுள்ளது. 

கோவை மாணவர் ஒருவர், மதிப்பெண் மாறியதாக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அவரது பிரச்னைக்கு பதில் அளிக்காமல், 15 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மத்திய அரசே உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. 

பல்வேறு குளறுபடிகளுடன் ஏழை, எளிய மாணவர்களிடையே தகுதி என்ற பெயரில் ஓரங்கக்கட்ட கொண்டு வரப்பட்ட தேர்வுதான் நீட் தேர்வு. 

மாணவர்களை கொல்லக்கூடிய தேர்வு; அது ஒரு  பலிபீடம். அரியலூர் அனிதா உள்ளிட்ட மாணவச் செல்வங்களை நாம் நீட் தேர்வில் இழந்திருக்கிறோம். இந்திய மாணவர்களையும் பலி கொடுத்திருக்கிறது 

நீட் தேர்வு குறித்து ஒட்டுமொத்த சமுதாயமும், மாணவர்களின் பெற்றோர்களின் நிலைப்பாட்டையே அரசு முன்வைத்திருக்கிறது' என்று பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com