நீட் தேர்வு 21- ஆம் நூற்றாண்டின் அறிவுத் தீண்டாமை என்றும் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி, சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பிய நிலையில், நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை கூடியது.
கூட்டத்தில், நீட் விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். பின்னர் மசோதா மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
அப்போது, மசோதா மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
நீட் தேர்வு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையின் பரிந்துரைக்கு ஏற்பவே சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பாஜக உறுப்பினர்கள் நீங்கலாக அனைத்து உறுப்பினர்களும் நீட் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அந்த மசோதா, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உணர்வையும் பேரவையின் இறையாண்மையும் எடுத்துரைக்கக்கூடியது. ஆனால், ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது சட்டப்பேரவையின் இறையாண்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதையும் படிக்க | 'நீட் தேர்வு மாணவர்களை கொல்லக்கூடிய பலிபீடம்' - முதல்வர் பேச்சு
நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த தரவுகள், ஊகங்களின் அடிப்படையில் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆனால், பொதுமக்கள் அனைவரிடம் இருந்தும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் பேரின் கருத்துகளின் அடிப்படையிலே முடிவு செய்யப்பட்டது. அரசுப்பள்ளியில் தமிழ்வழிப் பயின்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஆளுநர் இதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் திருப்பி அனுப்பி விமர்சித்துள்ளார்.
நீட் தேர்வு 21- ஆம் நூற்றாண்டின் அறிவுத் தீண்டாமை; தகுதி என்ற போர்வையில் உள்ள நீட் தேர்வு என்ற அறிவுத் தீண்டாமையை போக்க வேண்டாமா?
கருப்பாக இருந்தவர்கள் உள்ளே வரக்கூடாது என்பது எப்படி பாகுபாடோ, மாநில பள்ளிக்கல்வித் திட்டத்தில் இருந்து கேள்வி தயாரிக்காததும் பாகுபாடுதான். அந்தவகையில் இந்த பாகுபாட்டை அகற்ற வேண்டும்.
உயர்கல்வி குறித்து முடிவு எடுப்பது மாநில அரசின் அதிகாரம் என்று உச்சநீதிமன்றமே கூறியுள்ளது.
இதையும் படிக்க | தமிழக பேரவை: நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்
நீட் தேர்வு அரசியலமைப்புச் சட்டத்தின்படி உருவாக்கப்படவில்லை; மாறாக, அரசியலமைப்பின் அனைத்து அடிப்படைகளுக்கும் எதிரானது. சமூக நீதிக்கு எதிரானது, பணக்கார நீதியை பேசுகிறது;
சமத்துவம் என்பது அரசியலமைப்பின் அடிப்படை; அந்த சமத்துவத்துக்கு எதிரானது நீட் தேர்வு.
ஐந்து ஆண்டுகளாக இதில் உள்ள அநீதி பற்றி பேசியும் இன்னும் சிலருக்கு இதுகுறித்து புரியவில்லை என்பதுதான் என்னுடைய வருத்தம். உண்மையில், புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று வெற்றிபெறும் வரை போராட்டத்தை விடமாட்டோம் என்று அழுத்தம் திருத்தமாக இங்கு கூறுகிறேன்' என்று பேசியுள்ளார்.