ஆளுநர் சட்டப்பேரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டும்: முதல்வர்
ஆளுநர் என்பவர் சட்டப்பேரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டும் என்றும் மீண்டும் நிறைவேற்றப்படும் மசோதாவை ஆளுநர் காலம் தாழ்த்தாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார் என்று நம்புவதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.
நீட் தேர்வு 21- ஆம் நூற்றாண்டின் அறிவுத் தீண்டாமை என்றும் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி, சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பிய நிலையில், நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை கூடியது.
கூட்டத்தில், நீட் விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். பின்னர் மசோதா மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
அப்போது, மசோதா மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
வலிமையான அரசைவிட நேர்மையான அரசுதான் முக்கியம். அதனால்தான் வலிமையான பல அரசுகள் இருந்தும் மக்கள் இன்றும் அசோகரை நினைவு கூறுகின்றனர்.
அந்தவகையில், தமிழக அரசின் உணர்வுகளை மதித்து மாணவர்களை நலனை எண்ணி, சட்டப்பேரவையின் அதிகாரத்தின் கீழ் இயற்றப்பட்ட மசோதாவை 142 நாள்கள் கழித்து ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கிறார். விதி254(1) சட்டப்பேரவையின் சட்டமியற்றும் அதிகாரத்தை கேள்வி கேட்கும் வகையில் ஆளுநரின் செயல் இருக்கிறது.
சட்டப்பேரவையின் தீர்மானத்தை ஆளுநர் நிறுத்திவைக்க முடியும் என்றால் இந்திய மாநிலங்களின் கதி என்ன?
இந்த நீட் விலக்கு கோரிக்கை மூலமாக இந்தியாவிற்கே ஒளி ஏற்றி வைக்கிறோம்.
சமூக நீதி மட்டும் அல்ல திராவிடக் கொள்கை; மாநில சுயாட்சியும் திராவிடக் கொள்கைதான்.
இந்திய அரசியல் சாசனத்தின்படி மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும், இனிமேலாவது செய்வார் என்று நம்புகிறேன்.
இதையும் படிக்க | 'நீட் தேர்வு மாணவர்களை கொல்லக்கூடிய பலிபீடம்' - முதல்வர் பேச்சு
தமிழக அமைச்சரவையின் முடிவுகளை நிறைவேற்ற வேண்டிய கடமை ஆளுநருக்கு இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் முரண்படக்கூடிய சட்டத்தின் மீது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இப்போது மீண்டும் நிறைவேற்றப்படும் மசோதாவை ஆளுநர் காலம் தாழ்த்தாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார் என்று நம்புகிறேன்.
ஒற்றையாட்சி கொண்ட நாடாக இந்தியா மாற்றப்படாமல் தடுக்கும் இறையாண்மை என்பது சட்டப்பேரவையின் அதிகாரத்தை நிலைநாட்டும் இந்திய துணைக் கண்டம் என்பது அனைத்து தேசிய இணங்களுக்குமான நாடு என்பதை பிரகடனப்படுத்தும் அரசியல் சட்ட சிறப்புமிக்க நாளாக இந்த நாளை மாற்றியமைக்க வாய்ப்பளித்த பேரவைத் தலைவருக்கும், தமிழ் மக்களுக்கும் நன்றி' என்று பேசினார்.
இறுதியாக, 'தமிழ்நாடு வாழ்க' என்று மூன்று முறை கூறி உரையை நிறைவு செய்தார் முதல்வர்.