நாடோடி, இளைஞி, மூதாட்டி.. இவை படங்களின் பெயர்கள் அல்ல

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ளது. ஆளும் திமுக முதல், எதிர்க்கட்சியான அதிமுக உள்பட பல கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர்.
நாடோடி, இளைஞி, மூதாட்டி.. இவை படங்களின் பெயர்கள் அல்ல
நாடோடி, இளைஞி, மூதாட்டி.. இவை படங்களின் பெயர்கள் அல்ல


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ளது. ஆளும் திமுக முதல், எதிர்க்கட்சியான அதிமுக உள்பட பல கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். அவர்களுக்கு கடும் போட்டியாக, தங்கள் பகுதிகளில் மிகப் பிரபலமாக இருப்போர், சுயேச்சைகளாகவும் களமிறங்கியுள்ளனர்.

சென்னையில், சமூக ஆர்வலர் முதல், குடியிருப்புக் கழக உறுப்பினர் வரை, தங்கள் பகுதியின் பிரச்னைகளை நன்கு அறிந்தவர்கள், தற்போது வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக வார்டு கவுன்சிலர் பதவி காலியாக இருந்தபோது, பல்வேறு திட்டப் பணிகள் சீராக நடைபெற பெரும் கருவியாக இருந்தவர்கள், இன்று, தங்களுக்கு அந்த அதிகாரம் கிடைத்தால் நிச்சயம் இன்னும் சிறப்பாக பணியாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

132வது வார்டில் போட்டியிடும் 23 வயது பிரீத்தி வெற்றிவேல் கூறுகையில், கரோனா பேரிடரின்போதும், சென்னையில் பெருவெள்ளத்தின் போதும், நான் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பணியாற்றினேன். பொதுப் பணித்துறை வேலைகள் நடைபெறும்போதுதான், ஒரு கவுன்சிலரின் பணி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிந்து கொண்டேன். அதுபோன்ற சமயங்களில், அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட வேண்டியவர் கவுன்சிலர்தான் என்பது புரிந்தது என்கிறார் பிரீத்தி.

அதேவேளையில், இந்தப் பதவிக்கு வயது நிச்சயம் ஒரு முக்கியக் காரணி. சந்தேகமேயில்லை. இந்தப் பதவிக்கு இளைஞர்கள் அதிகமாக வரவேண்டும். அப்போதுதான், அவர்களுக்கு அந்தப் பகுதியில் இருக்கும் பிரச்னைகளும் தெரியும், அதற்கான வழிகளும், தொழில்நுட்ப வசதிகள் இருப்பதும் தெரியும். ஒரு பகுதியில் இருக்கும் பல பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண அது உதவும் என்கிறார்.

ஆனால், வயது வெறும் எண்ணிக்கைதான் என்பதை நிரூபித்துள்ளார் 94 வயதாகும் காமாட்சி சுப்பிரமணியன். சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, சமூக ஆர்வலாகச் செயல்பட்டு வருகிறார். இவர் 174வது வார்டில் போட்டியிடுகிறார்.

காமாட்சி, சுமார் 10 ஆண்டுகளாக, கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடக் காத்திருந்தவர். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கவுன்சிலர் பதவியின் அனைத்துப் பணிகளையும் அறிந்தவர். இது பெரும்பாலும், சமூக ஆர்வலர்களின் பணி போலவே இருக்கும். ஆனால், கவுன்சிலர் என்றால் அதற்கான கட்டுப்பாடுகளும், அதிகாரங்களும் இருக்கும் என்கிறார்.

ஒருவேளை, நான் கவுன்சிலராகத் தேர்வு செய்யப்பட்டால், ஒவ்வொரு பொதுப் பணித் துறை பணிகளையும் தொடங்குவதற்கு முன்பு, பொதுமக்களிடமும், அப்பகுதியில் வசிக்கும் மூத்த குடிமக்களிடமும், மாற்றுத்திறனாளிகளிடமும் கருத்துக் கேட்டுவிட்டுத்தான் பணியைத் தொடங்குவேன் என்றும் உறுதியளிக்கிறார்.

மீரா ரவிக்குமார், 175வது வார்டில் போட்டியிடும் இவரும் ஒரு சமூக ஆர்வலர்தான். தனது பகுதியில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றவர். குப்பைகளை பிரித்தெடுத்து அப்புறப்படுத்தவது தொடர்பான வழிமுறைகளை பின்பற்றி, பல பிரச்னைகளுக்கு தீர்வு கண்டவர்.

இந்த விஷயம் கூட, பெரிய மாற்றத்தைக் கொடுக்கும். ஒரு பிரச்னையை தீர்க்க என்ன வழிமுறை என்பதை நான் தேடுவேன். கவுன்சிலர் பதவி காலியாக இருப்பதால், இதுபோன்ற பல பிரச்னைகளை யாரும் சீண்டவேயில்லை, அதனை நாம் கையிலெடுத்து செய்யும் போது அதற்கு அதிக நாள்கள் எடுத்துக் கொள்கிறது என்கிறார்.

பாரதி கண்ணன்.. 47வது வார்டில் போட்டியிடும் இவர், தன்னை ஒரு நாடோடி என்று அறிமுகப்படுத்துக் கொள்கிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சைக்கிளிலேயே 124 நாள்கள் பயணம் மேற்கொண்டு, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். சமூக ஆர்வலர். இந்தப் பணியை மிகந்த உற்சாகத்தோடும், தீவிரத்தன்மை உணர்ந்து, பொறுபோடு செய்யக் காத்திருப்பதாகக் கூறுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com