மக்களின் தேவையை உணர்ந்த இயக்கம் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மக்களின் தேவையை  உணர்ந்த இயக்கம் திமுக என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 
மக்களின் தேவையை உணர்ந்த இயக்கம் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஈரோடு:  மக்களின் தேவையை  உணர்ந்த இயக்கம் திமுக என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 
ஈரோடு மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பிரசாரத்தில் பேசியது:
மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உழைத்துக் கொண்டிருக்கிறோம். தேர்தலுக்காக மட்டும் திமுக உருவாக்கப்படவில்லை. தமிழர்களின் இன உரிமையையும், தமிழ் மொழியையும் காப்பாற்றுவதற்காகவும், தமிழகத்தை இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக உருவாக்கவும், அனைத்து வளங்களையும் கொண்ட மாநிலமாக தமிழகத்தை மாற்றவும் உருவாக்கப்பட்ட இயக்கம்தான் திமுக.
பொற்கால ஆட்சி: 1967 முதல் இப்போது வரை 6 முறை ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக ஆட்சிக் காலம் என்பது நவீன தமிழகத்தை உருவாக்கும் பொற்கால ஆட்சியாகத்தான் அமைந்துள்ளது. இனியும் அப்படித்தான் அமையும். இனி தமிழகத்தில் திமுக ஆட்சிதான் இருக்கும் என்ற நிலையை திமுகவினர் உருவாக்க வேண்டும். 
தமிழ்நாட்டுக்கு எது தேவை, தமிழ் மக்களுக்கு எது வேண்டும், தமிழர்களின் பண்பாட்டுக்குப் பொருத்தமானது எது என்பதை உணர்ந்த இயக்கம் திமுகதான். திமுகவுக்கும், தமிழக மக்களுக்கும் இருப்பது ரத்த பந்தம்; அதை யாராலும் பிரிக்க முடியாது.
நீட் - எடப்பாடி பழனிசாமி விவாதிக்கத் தயாரா?: தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பழனிசாமி, தங்களது ஊழல்களை மறைக்க தினமும் ஒரு பொய் சொல்கிறார். அந்த வகையில் நீட் தேர்வை திமுக-காங்கிரஸ் கொண்டு வந்ததாக பொய் சொல்லி வருகிறார். தமிழகத்தில் பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்ற பின்புதான் நீட் தேர்வு நடத்தப்பட்டது.
சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளிக்கப்பட்ட பெரும்பான்மையான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம். இதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
அதிமுக ஆட்சியில் சீரழிந்த நிதி நிலைமையை இப்போதுதான் சரி செய்து வருகிறோம். மீதம் உள்ள வாக்குறுதிகளை அடுத்தடுத்து நிறைவேற்றுவோம்.
மக்கள் நலன் கருதி திட்டங்கள்: ஒரு திட்டத்தை எப்படி தீட்டுவது என்று அதிமுகவுக்குத் தெரியவில்லை. போதிய இடவசதியின்றி மினி கிளினிக் தொடங்கி, மருத்துவரை நியமிக்காமல் பெயரளவுக்கு திட்டத்தை அறிவித்தது இதற்கு உதாரணம்.
ஆனால், திமுக அரசில் திட்டங்கள் மக்களின் நலன் கருதி தீட்டப்படுகின்றன. பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத்தால், அரசுக்கு இழப்பு ஏற்பட்டாலும், பெண்கள் முன்னேறுவதுதான் முக்கியம் என கருதுகிறோம். 
அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி கோடிக்கணக்கில் பணம், நகைகளைப் பறிமுதல் செய்துள்ளனர். தங்களது ஆட்சியில் எண்ணற்ற முறைகேடுகளில் ஈடுபட்ட அதிமுகவினரிடம் உள்ளாட்சி நிர்வாகத்தைக் கொடுத்துவிடாதீர்கள்.
நகர்ப்புற உள்ளாட்சியில் உள்ள அனைத்து வார்டு உறுப்பினர் பதவிகளையும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வென்றால்தான் இந்த ஆட்சியின் திட்டங்களை மக்களிடம் சென்று சேர்க்க முடியும். எதிர்க்கட்சியினர் வென்றால் நல்ல திட்டங்களுக்கு இடையூறு செய்வார்கள். 
திராவிட இயக்கத்தின் தாய் வீடான ஈரோட்டை திமுகவின் கோட்டை என இந்த தேர்தலில் நிரூபிக்க வேண்டும் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com