சுரண்டை நகராட்சியின் முதல் தலைவர் யார்?

சுரண்டை நகராட்சியில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை என்பதால்  காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தலைவர் பதவியைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
சுரண்டை நகராட்சி
சுரண்டை நகராட்சி

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு கிராமமாக இருந்த சுரண்டை ஜமீன்களால் ஆளப்பட்டு வந்தது. சுரண்டை ஜமீன் அதிக வனப்பகுதியைக் கொண்ட பகுதி. இந்த சுரண்டை ஜமீனுக்கு 700 ஆண்டு வரலாறு சொல்லப்படுகிறது. சுரண்டை ஜமீன் சொந்தக்காரர்கள் பாண்டியர்களின் வழித் தோன்றல்கள் என்றும் நாயக்கர் காலத்தில் சுரண்டை பாளையமாக மாறியது என்றும், பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அது ஜமீனாக மாறியது என்றும் கூறப்படுகிறது. கீழ சுரண்டை, பங்களா சுரண்டை, மேலச் சுரண்டை என்ற மூன்று ஊர்களைக் கொண்டதுதான் சுரண்டை. 14 ஆம் நூற்றாண்டில் சுரண்டை ஜமீன் தோன்றியது என திருநெல்வேலி சரித்திரம் எழுதிய கால்டுவெல் கூறுகிறார். அழகு பார்வதி அம்மன் கோயில் இங்குள்ள அனைத்து சமுதாய மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக உள்ளது.

இங்கு குடியேறிய மக்களின் அயராத உழைப்பு காரணமாக படிப்படியாக உயர்ந்த இந்த கிராமம் 1980 காலகட்டத்தில் பேரூராட்சியாக தரம் உயர்ந்தது. இந்நகரத்தில் இல்லாத வசதிகளே இல்லை எனும் வகையில் மாநகராட்சிகளின் வளர்ச்சிக்கு இணையாக வளர்ந்து வந்தது. இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து தென்காசி தனி மாவட்டமான பின்னர் 24.08.2021 அன்று நகராட்சியாக மாற்றப்பட்டு அரசாணை வெளியானது. 27 வார்டுகள் கொண்ட இந்த நகராட்சி தனது முதல் தேர்தலை தற்போது சந்தித்துள்ளது.

இப்பகுதி மக்கள் சுரண்டையை நகராட்சியாக உணரும் முன்னரே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க நேர்ந்தது. காங்கிரஸ் கட்சிக்கு வலுவான அமைப்பு கொண்டதாக விளங்கும் சுரண்டையில் திமுக, அதிமுகவிற்கும் பரவலான வாக்கு வங்கி உள்ளது. 

சிவபத்மநாதன் | பழனி நாடார்
சிவபத்மநாதன் | பழனி நாடார்

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னதாக தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலர் சிவபத்மநாதன் மற்றும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் எம்எல்ஏ ஆகியோர் வார்டு பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேசிய பழனிநாடார், 6 நகராட்சிகளில் 2 மற்றும் 17 பேரூராட்சிகளில் 5 காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். நகராட்சி ஒன்றுகூட தரமுடியாது, 2 பேரூராட்சி வேண்டுமானால் தரலாம் என திமுக தரப்பில் கூறியதாக சொல்லப்படுகிறது.

காங்கிரஸ் வலுவாக உள்ள சுரண்டை ஒன்றையாவது கேட்டும் அதைக் கொடுக்க மறுத்தது திமுக. இதையடுத்து, சுரண்டையில் தனித்துப் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தினர். மாவட்டத்தின் மற்ற நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் சுரண்டை நகராட்சியில் இரு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டது. திமுக, காங்கிரஸ், அதிமுக என நடைபெற்ற மும்முனைப் போட்டியில் திமுக 9, காங்கிரஸ் 10, அதிமுக 6, தேமுதிக 1, சுயேச்சை 1 என 27 வார்டுகளைப் பங்கிட்டுக் கொண்டன.

எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை என்பதால்  காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தலைவர் பதவியைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில் திமுகவும் அதிமுகவினருடன் கூட்டணி வைத்து அவர்களில் ஒருவருக்கு துணைத் தலைவர் பதவியை வழங்கி கையில் எடுக்க காய்களை நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

26 வது வார்டில் வெற்றி பெற்ற திமுக நகரச் செயலாளர் ஜெயபாலன், 11 வது வார்டில் வெற்றி பெற்ற காங்கிரஸ் உறுப்பினர் வள்ளிமுருகன் ஆகிய இருவரில் ஒருவர் தலைவராக வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com