மாவட்டத்தில் புத்துணர்வு: ஈரோடு மேயராகப் போட்டியிடும் பெண்கள்!

சட்டப்பேரவைத் தேர்தலில் கோட்டைவிட்டதை மீட்டுள்ள உற்சாகத்தில் ஈரோடு மாவட்ட திமுகவினர் உள்ளனர்.
மாவட்டத்தில் புத்துணர்வு: ஈரோடு மேயராகப் போட்டியிடும் பெண்கள்!

ஈரோடு: சட்டப்பேரவைத் தேர்தலில் கோட்டைவிட்டதை மீட்டுள்ள உற்சாகத்தில் ஈரோடு மாவட்ட திமுகவினர் உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, சத்தியமங்கலம், கோபி, பவானி, புஞ்சைப்புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகள் உள்ளன. மாநகராட்சி, நகராட்சிகளில் முழுமையாக திமுக வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறது.

பேரூராட்சிகளில் லக்கம்பட்டி பேரூராட்சி தவிர மற்ற அனைத்தையும் திமுக கைப்பற்ற வாய்ப்புள்ளது.

ஈ.வெ.ரா. பெரியார் தலைவராக இருந்த பெருமைக்குரிய ஈரோடு நகராட்சி 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியானது. அப்போது நகராட்சித் தலைவராக இருந்த திமுகவைகச் சேர்ந்த குமார் முருகேஷ் மேயரானார். இதன்பிறகு 2011 நேரடித் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த மல்லிகா பரமசிவம் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

2016க்குப் பிறகு 6 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாத நிலையில் இப்போது தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.  இதில் திமுக 44, காங்கிரஸ் 3, மதிமுக 1, அதிமுக 6, சுயேச்சைகள் 6 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.  இதன்மூலம் கூட்டணிக் கட்சிகள் தயவில்லாமல் தனிப்பெரும்பான்மையுடன் திமுக மேயர் பதவியை கைப்பற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எதிர்பாராதது

ஈரோடு மாநகராட்சியில் தமாகவுக்கு ஒதுக்கிய 3 வார்டுகளையும் சேர்த்து மொத்தம் 58 வார்டுகளில் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக அணி களம் கண்டது. 2 வார்டுகளில் அதிமுக வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் மூலம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட 58 வேட்பாளர்களில் 6 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இதில் மாநகராட்சி 5 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் விஜயலட்சுமி 30 வாக்குகள் மட்டும் பெற்று போட்டியிட்ட 8 பேரில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதே சமயம் இந்த வார்டில் பாஜக வேட்பாளர் பரிமளாதேவி 2,460 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றார்.

ஈரோடு மாநகர அதிமுகவின் முக்கிய முகமாகக் கருதப்படும் பெரியார் நகர் இரா.மனோகரன் 19 ஆவது வார்டில் சுமார் 1,100 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மணிகண்டராஜா என்பவரிடம் தோல்வியடைந்துள்ளார். 60 வார்டுகளில் 12 முதல் 15  வார்டுகளை அதிமுக கைப்பற்றும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்த நிலையில் 6 வார்டுகளை மட்டுமே அதிமுக கைப்பற்றியுள்ளது அக்கட்சியினருக்கு மட்டுமில்லாமல் மற்ற கட்சிகளுக்கும் பேரதிர்ச்சி.

காங்கிரஸ்க்கு அதிர்ச்சி, ஏமாற்றம்

காங்கிரஸ் கட்சி மொத்தம் 5 வார்டுகளில் மட்டுமே களம் கண்டது. இதில் 5 பேரும் வெற்றி பெறுவார்கள். அதன் மூலம் துணை மேயர் பதவியைக் கோரலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்தது காங்கிரஸ். ஆனால் 3 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ்.

2 வார்டுகளிலும் காங்கிரஸ் தோல்விக்குக் காரணம் சுயேச்சையாக களமிறங்கிய திமுகவைச் சேர்ந்த பிரமுகர்கள். இந்த வார்டுகளில் சுயேச்சையாக களமிறங்கிய திமுகவைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற இருவரையும் திமுக அரவணைக்கத் தயாராக இருப்பது பெரும் ஏமாற்றத்தில் உள்ள காங்கிரஸுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அசர வைத்த அமைச்சரின் தேர்தல் கணக்கு

ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளராகவும் வீட்டுவசதித்துறை அமைச்சராகவும் உள்ள சு.முத்துசாமி, ஈரோடு மாநகராட்சி வார்டு வேட்பாளர் தேர்வில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டுள்ளது தேர்தல் வெற்றியில் பார்க்க முடிகிறது. மக்கள் செல்வாக்கு, பணம் இருப்பு இரண்டையும் கவனத்தில் கொண்டு வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளார். கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை என அதிருப்தியுடன் இருந்த பலரும் இந்த அபார வெற்றிக்கு பிறகு அமைச்சரை ஆராதிக்க தொடங்கிவிட்டனர்.

மேயர் யார்?

ஈரோடு மாநகராட்சி மேயர் பதவி பொது பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் திமுகவில் இப்போது மாநகரச் செயலாளர் சுப்ரமணியம் மனைவி நாகரத்தினம், 2011 தேர்தலில் மேயர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த செல்லப்பொன்னி இருவரிடையே கடும் போட்டி நிலவுகிறது. தவிர திமுக முக்கியப் பிரமுகர் திண்டல் குமாரசாமி மருமகள் கீர்த்தனா, முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மணிராசு மனைவி கோகிலா, திமுக பிரமுகர் மறைந்த நடேசன் மனைவி மேனகா ஆகியோரும் மேயர் கனவில் உள்ளனர்.

நல்லசிவத்துக்கு நல்ல காலம்

ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் என்.நல்லசிவம். 60 வயதைக் கடந்த இவர் உள்ளாட்சி அமைப்புகள் உள்பட எந்த பொறுப்பிலும் இதுவரை இருந்ததில்லை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அந்தியூர் தொகுதியை எதிர்பார்த்த இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்போது நடைபெற்றுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோபி, பவானி, சத்தியமங்கலம், புஞ்சைப்புளியம்பட்டி என 4 நகராட்சிகளில் முழுமையாகவும், தவிர அவருடைய கட்சி நிர்வாக எல்லைக்குள் உள்ள பேரூராட்சிகளில் 95 சதவீதம் அளவுக்கு திமுக வெற்றிக்கொடி நாட்டியுள்ளது.

இதன் மூலம் 4 நகராட்சிகளிலும் திமுக தலைவர் பதவியைக் கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. சுமார் 20 பேரூராட்சிகளில் தவிர ஒன்றிரண்டு தவிர மற்ற அனைத்திலும் திமுக தலைவர் பதவியை கைப்பற்றும் நிலை உள்ளது. இந்த வெற்றியின் மூலம் வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவத்துக்கு நல்ல காலம் பிறந்துள்ளது என்கின்றனர் திமுகவினர். இதன்மூலம் தலைமையின் கவனத்தை ஈர்த்துள்ள நல்லசிவத்துக்கு மக்களிடம் கவனம்பெறும் அளவுக்கு முக்கியமான அரசுப்பதவி கிடைக்க வாய்ப்புள்ளது என திமுக மூத்த நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

திமுகவுக்கு உத்வேகம்

ஈரோடு மாவட்டத்தைப் பொருத்தவரை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் திமுக பெற்றுள்ள அபார வெற்றி சட்டப்பேரவைத் தேர்தலில் இழந்ததை இப்போது மீட்டுவிட்ட உற்சாக மனநிலையில் உள்ளது. தேர்தல் பரப்புரையின்போது ஈரோட்டில் பேசிய திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ  சட்டப்பேரவைத் தேர்தலில் 8 தொகுதிகளில் திமுக கூட்டணி 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றியை மக்கள் தர வேண்டும், அதற்கு கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
கட்சியினரின் உழைப்பும், மக்கள் ஆதரவும் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோளை நிறைவேற்றிக்கொடுத்துள்ளது. இனி மக்களின் கோரிக்கைகளை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் கடமை தங்களுக்கு உள்ளது என்பதை புதிதாக தேர்வு செய்யப்பட்ட பிரநிதிகள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பது வெகுஜன மக்களின் எதிர்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com