முல்லைப்பெரியாறு வாய்க்கால் அருகில் இருந்தும் குடிநீர் பற்றாக்குறை: அவதியுறும் காமயகவுண்டன்பட்டி மக்கள்

முல்லைப் பெரியாறு வாய்க்கால் அருகே இருந்தும் 22 நாட்களாக குடிநீர் பற்றாக்குறை காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
செம்மண் கலரில் இருக்கும் குடிநீருடன் பெண்கள்.
செம்மண் கலரில் இருக்கும் குடிநீருடன் பெண்கள்.

கம்பம்: தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி அருகே முல்லைப் பெரியாறு மற்றும்  சின்ன வாய்க்கால் ஆகியவற்றிலிருந்து நீர்வரத்து போதுமானதாக இருந்தும், 22 நாட்களாக குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் கவுண்டன்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகளில் சுமார் 18 ஆயிரம் பேர் உள்ளனர். பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் லோயர் கேம்பில் உள்ள முல்லைப் பெரியாற்றில் நீரேற்று நிலையம் மூலம் நாள்தோறும் 8 லட்சம் லிட்டர் தண்ணீர், காமயகவுண்டன்பட்டி முல்லைப் பெரியாற்றில் அமைக்கப்பட்ட நீரேற்று நிலையம் மூலம் நாள்தோறும் 4 லட்சம் லிட்டர் தண்ணீரும் விநியோகிக்கப்பட்டு வந்தது. குடிநீர் குழாய் இணைப்புகள் 3,475 உள்ளன.

கடந்த 22 நாட்களாக பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. குறிப்பாக, 8 ஆவது வார்டு பகுதியிலிருந்து அருகே உள்ள 7 ஆவது வார்டுக்கு 10  நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

மேலும், அவ்வாறு வரும் குடிநீர் கலங்களாகவும், செம்மண் கலரிலும் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்க திங்கள்கிழமை முற்றுகை செய்தனர்.

குடிநீர் விநியோகம் செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக குடிநீர் பிரிவு ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் அடிக்கடி வாய்த் தகராறு ஏற்பட்டு வருகிறது.

இதுபற்றி நிர்வாக அலுவலர் மல்லிகா கூறும்போது, 35  ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட கூட்டு குடிநீர் திட்டம்,  குழாய்கள் அனைத்தும் நெகிழி குழாய்களாக  போடப்பட்டுள்ளது. அதனால் அடிக்கடி குழாய் உடைவதால் குடிநீர் விநியோகம் பாதிக்கிறது.

குறிப்பாக லோயர் கேம்பில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து  விநியோகம் செய்யப்படும் கூட்டு குடிநீர் திட்டக் குழாய்களில்தான் முறையான பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதுபற்றி மாவட்ட ஆட்சியர் உதவ இயக்குநர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

8 ஆவது  வார்டு கிருஷ்ணமூர்த்தி வாத்தியார் தெருவைச் சேர்ந்த பெண்கள் லட்சுமி, செல்வி ஆகியோர்  கூறும்போது, 'குடிநீர் எங்கள் தெருவில் 22 நாட்களாக வரவில்லை. திங்கள்கிழமை வந்த குடிநீர் செம்மண் கலரில் உள்ளது.

ஏற்கனவே கரோனா பாதிப்பு தொடரும் நிலையில், கலங்கலான தண்ணீர் குடித்தால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படும் என்று தண்ணீரை பிடிக்கவில்லை, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை, அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும், மேலும், செயல்படாமல் கட்டி முடிக்கப்பட்ட புதிய மேல்நிலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றி விநியோகம் செய்ய வேண்டும். குடிநீர் குழாய் இணைப்புகளில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார்களை அகற்ற வேண்டும்' என்று தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com