திருவள்ளூர் அருகே வீட்டில் 43 சவரன் நகை, ரூ.7000 ரொக்கம் திருட்டு

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 43 சவரன் நகை மற்றும் ரூ.7 ஆயிரம் ரொக்கம் ஆகியவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
கோப்பிலிருந்து..
கோப்பிலிருந்து..

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 43 சவரன் நகை மற்றும் ரூ.7 ஆயிரம் ரொக்கம் ஆகியவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மணவாளநகர் காவல் நிலைய காவலர்கள் தரப்பில் கூறியதாவது, சென்னை வடபழனியை சேர்ந்தவர் மகேஸ்வரன், இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் திருவள்ளூர் அருகே நுங்கம்பாக்கம் ஊராட்சி, லட்சுமி பிரியா நகரில் புதிய வீடு கட்டி கடந்த 2 ஆண்டுகளாக தனது மனைவி லாவண்யா மற்றும் மகன் மகளுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சென்னை தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மகேஸ்வரன் தனது பிறந்த நாளை சென்னையில் வசிக்கும் அம்மாவுடன் கொண்டாட முடிவு செய்து, கடந்த 25-ஆம் தேதி இரவு 10 மணிக்கு லட்சுமி பிரியா நகர் வீட்டிலிருந்து குடும்பத்துடன் சென்னை வடபழனி சென்றாராம்.

இதையடுத்து மகேஸ்வரன் தனது பிறந்த நாளை அம்மா ஜெகதீசுவரியுடன் கொண்டாடினார். மேலும் அம்மாவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அங்கேயே தங்கவும் நேர்ந்துள்ளது. இந்த நிலையில் லக்ஷ்மி பிரியா நகரில் உள்ள மகேஸ்வரன் வீட்டில் அருகாமையில் வசித்து வந்தவர், திங்கள்கிழமை மாலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 
அதைத் தொடர்ந்து தகவல் தெரிவிக்கவே அவர் உடனே வடபழனியில் இருந்து குடும்பத்துடன் வந்து பார்த்தார். அப்போது வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 43 சவரன் நகை மற்றும் ரூ.7 ஆயிரம் ரொக்கம் ஆகியவைகளை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றதும் தெரியவந்தது. இது தொடர்பாக இரவில் மணவாளநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், திருட்டுச் சம்பவம் நடைபெற்ற இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விவரங்களையும் கேட்டறிந்தார். பின்னர் இது தொடர்பாக மணவாளநகர் காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை, ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com