தமிழ்நாட்டு பத்திரிகையாளர்களுக்காக குரல் கொடுத்த மதுரை எம்பி

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய ஆறு மாவட்டங்களில் ஒப்பந்த அடிப்படையிலான பத்திரிகையாளர் பணிகளுக்கான 'விரும்பப்படும் கூடுதல் தகுதிகளும்' அதில் வெளியிடப்பட்டிருந்தன.
மதுரை எம்பி  சு வெங்கடேசன்
மதுரை எம்பி சு வெங்கடேசன்
Published on
Updated on
1 min read

கடந்த ஜனவரி 11ஆம் தேதி, "பல் ஊடக பத்திரிக்கையாளர்" என்ற பதவிக்கான அறிவிக்கையை பிரசார் பாரதி வெளியிட்டது. எட்டு காலியிடங்கள்தான் உள்ளது என்றும் தூர்தர்சன், அகில இந்திய வானொலி ஆகியனவற்றிற்கு அவரது பணிகள் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய ஆறு மாவட்டங்களில் ஒப்பந்த அடிப்படையிலான பத்திரிகையாளர் பணிகளுக்கான 'விரும்பப்படும் கூடுதல் தகுதிகளும்' அதில் வெளியிடப்பட்டிருந்தன. அதில், இந்தி அறிவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதற்கு என்ன கூடுதல் மதிப்பெண், முன்னுரிமை என்ற விவரங்கள் போன்றவை அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இது இந்தி அறியாத விண்ணப்பதாரர்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி உள்ளது.

இந்நிலையில், மதுரை எம்பி சு. வெங்கடேசன் இதுகுறித்து மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் சிங் தாகூர், பிரச்சார் பாரதி தலைமை நிர்வாக அலுவலர் சசி எஸ். வேம்பதி ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், "தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் பணியாற்ற இந்தி எதற்கு? தாங்கள் கழித்துக் கட்டப்படுவதற்கு இது காரணம் ஆக்கப்படுமோ என்றும் போட்டியில் தங்களுக்கு தடைக் கல்லாக மாறுமோ என்றும் பத்திரிகையாளர்கள் கவலை தெரிவித்துவருகின்றனர். பிரசார் பாரதி "இந்தி பிரச்சார பாரதியாய்" தன்னை நினைத்துக் கொள்கிறதா என்று தெரியவில்லை.  

இந்த அறிவிக்கையில் இட ஒதுக்கீடு பற்றிய குறிப்புகளும் இல்லை. இந்த பதவி புதிதானதா? இந்த பதவியில் மொத்தம் அனுமதிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எவ்வளவு? அந்த எண்ணிக்கை இட ஒதுக்கீடுக்கான வரம்பிற்குள் வருகிறதா இல்லையா?" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "விரும்பப்படும் கூடுதல் தகுதி" பட்டியலில் இருந்து இந்தியை நீக்க வேண்டும், இட ஒதுக்கீடு பற்றிய விளக்கம் தரவேண்டும் என்றும் வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com