தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு: முதல்வர் 

தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மற்றும் சங்ககாலக் கொற்கைத் துறைமுகத்தினை அடையாளம் காண முன்களப் புல ஆய்வு நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு: முதல்வர் 
தமிழகத்தில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு: முதல்வர் 


சென்னை: தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மற்றும் சங்ககாலக் கொற்கைத் துறைமுகத்தினை அடையாளம் காண முன்களப் புல ஆய்வு நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,  தமிழ் நிலமானது மிகத்தொன்மை வாய்ந்தது. தமிழின் தொன்மையையும், தமிழரின் பண்பாட்டையும் அறிவியல்பூர்வமாக நிறுவ வேண்டுமானால் முறையான அகழாய்வுகள் அவசியமாகும்.

அண்மைக்காலமாக, கீழடி, அழகன்குளம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் தமிழகத்தின் தொன்மையைப் புதிய காலக்கணிப்பு மூலம் பல நூற்றாண்டுக் காலத்திற்கு முன்னோக்கி எடுத்துச் சென்றுள்ளது என்றால் அது மிகையாகாது.

கீழடி அகழாய்வு மற்ற அகழாய்வுகளுக்கு முன்னோடி அகழாய்வாகத் திகழ்கிறது. இதுவரை கங்கைச் சமவெளியில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்த “நகரமயமாக்கம்’’ தமிழ்நாட்டில் இல்லையென்றும், பிராமி எழுத்து மௌரியர் தோற்றுவித்தது என்றும் கருதுகோள்கள் இருந்தன. அத்தகைய கருதுகோள்களுக்கு அறிவியல்பூர்வமாக விடையளித்துள்ளது கீழடி அகழாய்வு.

தமிழ்நாட்டில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பது மட்டுமல்லாமல், படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கீழடி அகழாய்வு நிலைநிறுத்தியுள்ளது.
சிவகளை முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமி நீங்கிய நெல்மணிகளின் காலம் கி.மு. ஆயிரத்து நூற்று ஐம்பத்தைந்து எனக் கண்டறியப்பட்டுள்ளது. “தண் பொருநை’’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் மூவாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்ய முடிகிறது என்பதை கடந்த 8-9-2021 அன்று சட்டப்பேரவையில் நான் அறிவித்தேன்.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்றுக்காலம் வரையிலான தொல்லியல் இடங்களில் அகழாய்வு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு மற்றும் விழுமியங்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தற்போது 2022ஆம் ஆண்டில் கீழ்க்காணும் ஏழு இடங்களில் அகழாய்வுகள் செய்யப்படவுள்ளன.

1. கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள்( கொந்தகை, அகரம்,
மணலூர்), சிவகங்கை மாவட்டம் – எட்டாம் கட்டம்
2. சிவகளை, தூத்துக்குடி மாவட்டம் – மூன்றாம் கட்டம்
3. கங்கைகொண்டசோழபுரம், அரியலூர் மாவட்டம்- இரண்டாம் கட்டம்
4. மயிலாடும்பாறை, கிருஷ்ணகிரி மாவட்டம்- இரண்டாம் கட்டம்
5. வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் – முதல் கட்டம்
6. துலுக்கர்பட்டி, திருநெல்வேலி மாவட்டம்- முதல் கட்டம்
7. பெரும்பாலை, தர்மபுரி மாவட்டம்- முதல் கட்டம்


மேலும், “திரைகடலோடியும் திரவியம் தேடல்’’ என்ற முதுமொழிக்கேற்ப, பண்டையத் தமிழ்ச் சமூகம் நாட்டின் பிறபகுதிகளோடும், வெளிநாடுகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்த சங்ககாலத் துறைமுகங்களான பூம்புகார், கொற்கை, அழகன்குளம், வசவசமுத்திரம் ஆகியவை முக்கியப் பங்காற்றின. தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, தன்பொருநை (தாமிரபரணி) ஆற்றின் முகத்துவாரத்திற்கு எதிரில் கடற்கரையோர முன்கள புலஆய்வு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. முதற் கட்டமாக, சங்ககாலக் கொற்கைத் துறைமுகத்தின் தொல்லியல் வளத்தினைக் கண்டறிய கடலோரங்களில் ஆய்வினை மேற்கொள்ள இந்தியக் கடலாய்வு பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கடல் ஆய்வு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

அகழாய்வுப் பணிகள் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் இறுதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இதற்காக வரவு- செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 5 கோடி ரூபாய் நிதியில் அகழாய்வுகள், களஆய்வுகள் மற்றும் சங்க காலக் கொற்கைத் துறைமுகத்தினை அடையாளம் காண முன்களப் புல ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதைச் சான்றுகளின் அடிப்படையில் அறிவியல்பூர்வமாக நிறுவுவதற்கு மேற்காணும் அகழாய்வுகளும், முன்கள புலஆய்வுப் பணிகளின் முடிவுகளும் உறுதி செய்யும்.

துலுக்கர்பட்டி
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரிலிருந்து தென்கிழக்கே 6 கி.மீ தொலையில் நம்பி ஆற்றின் இடது கரையில் துலுக்கர்பட்டி என்ற ஊர் அமைந்துள்ளது.

இவ்வூரிலிருந்து கண்ணநல்லூர் செல்லும் சாலையில் 2.5. கி.மீ தொலைவியில் வாழ்வியல் மேடு காணப்படுகிறது. இந்தப் பகுதி விளாங்காடு என்றழைக்கப்படுகிறது. இரும்பு மற்றும் தொடக்க வரலாற்றுக் காலத்தைச் சார்ந்த வாழ்வியல் மேடானது 2.5 மீ உயரத்தில் 12 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது. இங்கு செவ்வண்ணம், கருப்பு-சிவப்பு வண்ணம், கருப்பு வண்ணம், வெண்புள்ளி இட்ட கருப்பு-சிவப்பு வண்ண ஆகிய மட்கல ஓடுகளும் குறியீடுகள் கொண்ட மட்கல ஓடுகளும் ஈமத்தாழிகளும் கிடைக்கின்றன. இந்தப் பண்பாட்டு மேட்டில் கிடைக்கப்பெற்றுள்ள அரிய தொல்பொருட்களைக் கருத்தில் கொண்டு தன்னுள் மறைத்துள்ள பண்பாட்டுக்கூறுகளை கண்டறிய இப்பண்பாட்டு மேடு காத்திருக்கிறது. இந்த அகழாய்வின் குறிக்கோள் செரிவுமிக்க இத்தொல்லியல் தளத்தின் உருவாக்கம், குடியேற்ற முறை மற்றும் தொல்பொருட்களின் தன்மை ஆகியவற்றை கண்டறிவதாகும். நம்பி ஆற்றின் கரையில் இரும்புக்காலப் பண்பாட்டின் வேர்களைத் தேடுவதே இவ்வகழாய்வின் நோக்கமாகும். இத்தொல்லியல் தளமானது சிவகளை, ஆதிச்சநல்லூருக்கு சமகாலக்கட்டமாகும்.

வெம்பக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இருந்து தெற்கே 15 கி.மீ தொலைவில் வைப்பாறு ஆற்றின் இடது கரையில் வெம்பக்கோட்டை என்ற ஊர் அமைந்துள்ளது.

மேட்டுக்காடு என்றும் உச்சிமேடு என்றும் அழைக்கப்படுகின்ற 25 ஏக்கர் பரப்பளவில் பரந்து கிடக்கின்ற தொல்லியல் மேட்டில் நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து வாழ்ந்ததற்கான அடையாளங்களை வெளிப்படுத்துகின்றது. 

இத்தொல்லியல் மேடு தற்போதைய நிலப்பரப்பில் இருந்து 2 மீ உயரம் கொண்டது. இங்கு இரும்புக் கால மட்கல ஓடுகள் மிகுதியாக சிதறிக்கிடக்கின்றன. இம்மேட்டில் நுண்கற்கருவிகள், பல்வேறு வகையான மணிகள், அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள், காதணிகள், சுடுமண்ணால் ஆன வட்டுகள், இரும்புக் கசடுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன.

தற்போது மேற்கொள்ளப்படவுள்ள அகழாய்வின் நோக்கமானது காலவாரியாக தொடர்ந்து நிலவியல் உருவாக்கத்தின் பின்னனியில் அதிக எண்ணிக்கையிலான நுண்கற்கருவிகளை சேகரிப்பதாகும். 

பெரும்பாலை:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் – மேலச்சேரி சாலையில் பென்னாகரம் இருந்து 25 கி.மீ தொலைவில் பாலாறு ஆற்றின் இடது கரையில் பெரும்பாலை என்னும் வராலாற்றுச் சிறப்புமிக்க இடம் அமைந்துள்ளது. இவ்வூர் கொங்கு நாட்டின் வடவெல்லையாக தொன்றுதொட்டு கருதப்படுகிறது. இங்குள்ள வாழ்விட மேடானது தற்போதைய நிலவியல் அமைப்பிலிருந்து 3 முதல் 4 மீட்டர் உயரத்தில் 75 ஏக்கர் நிலப் பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது. இம்மேட்டில் கருப்பு-சிவப்பு நிற மட்கல ஓடுகள், கருப்பு நிற மட்கல ஓடுகள், சிவப்பு பூச்சுப்பெற்ற மட்கல ஓடுகள், சிவப்பு நிற மட்கல ஓடுகள் கிடைக்கின்றன. செம்மனூர் சிவன் கோயில் எதிரே ஈமக்காடுப் பகுதி காணப்படுகிறது. அண்மையில் ஈமக்காட்டுப் பகுதியின் நடுவே கால்வாய் வெட்டியபோது உயரமான வயல்வெளியில் 50க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் கண்டறியப்பட்டன. கிடைக்கப்பெற்றுள்ள தொல்பொருட்கள் மூலம் தொடக்க வரலாற்றுக் காலத்தைப் பற்றிய சிறந்த நுண்ணறிவை பெரும்பாலைத் தொல்லியல் தளம் நாட்டிற்கு வழங்கிடும். அகழ்வாராய்ச்சியின் குறிக்கோளானது இத்தகைய தொல்லியல் திறன் வாய்ந்த தளத்தின் தள உருவாக்கம், குடியேற்றம், தொல்பொருட்களின் தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்துவதாகும். காவிரியின் கிளை ஆறான பாலாற்றின் ஆற்றங்கரைகளில் இரும்புக்காலப் பண்பாட்டின் வேர்களைத் தேடுவது இந்த அகழாய்வின் நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com