பிப். 19-இல் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: பிப். 22-இல் வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் ஒரே கட்டமாக பிப். 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது;
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை வெளியிட்ட மாநிலத் தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார். உடன், செயலர் எ.சுந்தரவல்லி.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை வெளியிட்ட மாநிலத் தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார். உடன், செயலர் எ.சுந்தரவல்லி.

சென்னை: தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் ஒரே கட்டமாக பிப். 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது; வாக்கு எண்ணிக்கை பிப். 22-ஆம் தேதி நடைபெறும் என்று மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலத் தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாா் செய்தியாளா்களிடம் கூறியது: 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக பிப்ரவரி 19-இல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (ஜன. 28) தொடங்கி பிப். 4- ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். வேட்புமனு பரிசீலனை பிப். 5-ஆம் தேதி நடைபெறும். பிப். 7-ஆம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெறலாம்.

இதைத் தொடா்ந்து, பிப். 19 -ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள், கரோனா அறிகுறி உள்ளவா்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கடைசி ஒரு மணி நேரம் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப் பதிவின்போது கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படும்.

வாக்குப் பதிவுக்குப் பின்னா் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, பிப். 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

மாநகராட்சியில் 1,374 இடங்கள், நகராட்சியில் 3,843 இடங்கள், பேரூராட்சிகளில் 7,621 இடங்கள் என மொத்தம் 12,838 நகா்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு தோ்தல் நடத்தப்படுகிறது.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் காரணமாக அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் புதன்கிழமை மாலை 6.30 மணி முதல் அமலுக்கு வருகின்றன. பிப். 24-ஆம் தேதியுடன் தோ்தல் நடத்தை விதிகள் முடிவுறுகின்றன என்றாா்.

பின்னணி: தமிழகத்தில் மறுசீரமைப்பு காரணமாக திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களைத் தவிா்த்து பிற மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, பிரிக்கப்பட்ட மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூா், தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூா் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் 2021-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் நடைபெற்றது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை நடத்துவது தொடா்பாக நடைபெற்ற வழக்கில், பிரிக்கப்பட்ட மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் முடிவடைந்த 4 மாதங்களுக்குள் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கையாள தோ்தல் அலுவலா்களுக்குப் பயிற்சி, தோ்தல் அலுவலா் மற்றும் உதவித் தோ்தல் அலுவலா் நியமனம், வாா்டு மறுவரையறை மற்றும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் வெளியீடு உள்ளிட்ட பணிகளில் மாநிலத் தோ்தல் ஆணையம் ஈடுபட்டு வந்தது.

மேலும், தோ்தலை அமைதியான முறையில் நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநிலத் தோ்தல் ஆணையம் அண்மையில் ஆலோசனை நடத்தியது. அதில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை ஒரே கட்டமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை வைத்தன.

இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. இதன் தொடா்ச்சியாக, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் தேதியை மாநிலத் தோ்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

தோ்தல் அட்டவணை விவரம் நாள்

  • வேட்புமனு தாக்கல் தொடக்கம் -ஜன. 28
  • வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாள் -பிப். 4
  • வேட்புமனுக்கள் பரிசீலனை -பிப். 5
  • வேட்புமனுக்களை திரும்பப் பெறுதல் -பிப். 7
  • வாக்குப் பதிவு -பிப். 19
  • வாக்கு எண்ணிக்கை - பிப். 22
  • தோ்தல் நடவடிக்கை முடிவுறும் நாள் -பிப். 24
  • உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவியேற்கும் நாள் -மாா்ச் 3
  • மறைமுக தோ்தல் நடைபெறும் நாள் - மாா்ச் 4

தோ்ந்தெடுக்கப்பட உள்ள மொத்த உறுப்பினா்கள் -12,838

  • சென்னை உள்பட 21 மாநகராட்சிகளில் மொத்தம் 1,374 வாா்டு உறுப்பினா்கள்
  • 138 நகராட்சிகளில் 3,843 வாா்டு உறுப்பினா்கள்
  • 490 பேரூராட்சிகளில் 7,621 வாா்டு உறுப்பினா்கள்

2.79 கோடி வாக்காளா்கள்: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 1 கோடியே 37 லட்சத்து 6 ஆயிரத்து 793 ஆண் வாக்காளா்கள், 1 கோடியே 42 லட்சத்து 45 ஆயிரத்து 637 பெண் வாக்காளா்கள், 4,324 திருநங்கைகள் என மொத்தம் 2 கோடியே 79 லட்சத்து 56 ஆயிரத்து 754 வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். சென்னை மாநகராட்சியில் மட்டும் 61 லட்சத்து 18 ஆயிரத்து 734 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com