கிறிஸ்துவர்களிடம் செல்போன், வாகனம் பறிப்பு: ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் கைது

மதமாற்றம் செய்ய வந்ததாகக் கூறி கிறிஸ்துவ சகோதரிகளின் செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறித்த ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் கணேஷ் பாபுவைக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிறிஸ்துவர்களிடம் செல்போன், வாகனம் பறிப்பு: ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் கைது
Published on
Updated on
2 min read


மதமாற்றம் செய்ய வந்ததாகக் கூறி கிறிஸ்துவ சகோதரிகளின் செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறித்த ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் கணேஷ் பாபுவைக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் சமாதானபுரதில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் கன்னியாஸ்திரியாக ஊழியம் செய்துவருபவர்கள் ராணி, தேவசாந்தி. இவர்கள் இருவரும் திம்மயம்பட்டியில் கர்ப்பம் தரித்திருந்த ஒரு பெண்ணிற்கு ஜெபம் செய்வதற்காகச் சென்றதாகக் கூறப்படுகிறது. 

ராணி மற்றும் சாந்தி
ராணி மற்றும் சாந்தி

இந்த நிலையில் இதைக்கண்ட புதுக்கோட்டை மாவட்ட ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் கணேஷ் பாபு (38) தலைமையிலான ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 20-க்கும் மேற்பட்டோர் அந்த இரண்டு கிறிஸ்துவ கன்னியாஸ்திரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு ஹிந்துக்களை மதம் மாற்றம் செய்ய முயற்சிக்கிறீர்களா என்று கேட்டு அவர்களைத் தகாத வார்த்தைகள் சொல்லி திட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தைப் பறித்துக் கொண்டும் அவர்கள் உபயோகித்த செல்பேசியை பிடுங்கிக் கொண்டும் அவர்களைத் திட்டி விரட்டி உள்ளனர். இதனையடுத்து கால்நடையாக இலுப்பூர் வந்தவர்கள் கிறிஸ்தவ சபையில் நடந்த நிகழ்வு குறித்து விளக்கியுள்ளனர். 

மேல் நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து இலுப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து நேற்று (சனிக்கிழமை) இரவு காவல் துறையினர் கணேஷ் பாபுவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

கணேஷ் பாபுவிற்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து அமைப்பினர் மற்றும் அவரது உறவினர்கள் புதுக்கோட்டை - விராலிமலை சாலையில் மறியலில் ஈடுபட்டு தமிழக அரசுக்கும் காவல் துறையினருக்கும் எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரைக் காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் இலுப்பூர் பகுதி முழுவதும் காவல் துறையினர் குவிக்கப்பட்டு ஆங்காங்கே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com