
செங்கல்பட்டு சாலை விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இன்று (8.7.2022) காலை செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து ஒன்று கன்டெய்னர் லாரியின் பின்புறம் மோதியதில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன்.
இதையும் படிக்க- நவீன முறையில் வள்ளுவர் கோட்டம் சீரமைக்கப்படும்: அமைச்சர் சாமிநாதன்
உயிரிழந்தவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இதே விபத்தில் காயமடைந்த ஒன்பது நபர்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் ஐந்து இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் ஒரு இலட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூபாய் ஐம்பதாயிரமும் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.