சிறுமியின் கருமுட்டை விற்பனை: 4 மருத்துவமனைகள் நிரந்தரமாக மூட நடவடிக்கை

ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்த விவகாரத்தில் 4 தனியார் மருத்துவமனைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்த விவகாரத்தில் 4 தனியார் மருத்துவமனைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் 16 வயது சிறுமியிடமிருந்து கருமுட்டை எடுத்து ஈரோடு, பெருந்துறை, ஓசூா், சேலம், திருப்பதி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, சிறுமியின் தாய், அவரது இரண்டாவது கணவா் மற்றும் தரகா் மாலதி, சிறுமியின் ஆதாா் அட்டையில் திருத்தம் செய்த ஜான் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசுத் தரப்பில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது, தமிழகம், ஆந்திரம் மற்றும் கேரளத்தில் விரிவான விசாரணை மேற்கொண்டது. குழுவின் விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்டது.

இந்நிலையில், கருமுட்டை விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:

சிறுமியின் கருமுட்டையை 2 ஆண்டுகளில் பலமுறை எடுத்து பெற்றோர்களே விற்பனை செய்துள்ளனர். இதில், தமிழகத்தில் 4 மருத்துவமனைகள், ஆந்திரம், கேரளத்தில் தலா ஒரு மருத்துவமனை சம்பந்தப்பட்டுள்ளது.

குடும்பத்தினரே ஒப்புதல் அளித்தாலும், 21 வயது முதல் 35 வயதுடைய பெண்களில் ஒரு குழந்தை பெற்றவர்கள் மட்டுமே கருமுட்டை எடுக்க முடியும்.

மருத்துவ விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஈரோடு, சேலம் சுதா மருத்துவமனை, ஓசூர் விஜய் மருத்துவமனை மற்றும் பெருந்துறை ராம்பிரசாத் மருத்துவமனைகள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மருத்துவமனைகளுக்கு ரூ. 50 லட்சம் வரை அபராதமும், சம்பந்தப்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகளை சிறைத் தண்டனையும் கிடைக்க வாய்ப்புள்ளது.

சம்பந்தப்பட்ட 4 மருத்துவமனைகளும் 15 நாள்களில் அனைத்து நோயாளிகளையும் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும்.

உடனடி நடவடிக்கையாக, 4 மருத்துவமனைகளின் ஸ்கேன் செண்டர்களும் மூடப்படும். முதலமைச்சரின் காப்பீட்டுகளுக்கான உரிமைகள் ரத்து செய்யப்படும்.

வெளி மாநிலங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி துறை செயலாளர் மூலம் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com