யாருக்கு அதிர்ஷ்டம்? ஆக. 3 முதல் அரசு விரைவுப் பேருந்துகளில் சரக்குகளை அனுப்பலாம்!

தமிழகத்தில் பயணச்சீட்டு அல்லாத வருவாயை அதிகரிக்க, மாதம் முழுவதும் பேருந்துகளில் சரக்குகளை வாடகை அடிப்படையில் ஏற்றிச் செல்லும் திட்டம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
யாருக்கு அதிர்ஷ்டம்? ஆக. 3 முதல் அரசு விரைவுப் பேருந்துகளில் சரக்குகளை அனுப்பலாம்!


தமிழகத்தில் பயணச்சீட்டு அல்லாத வருவாயை அதிகரிக்க, மாதம் முழுவதும் பேருந்துகளில் சரக்குகளை வாடகை அடிப்படையில் ஏற்றிச் செல்லும் திட்டம் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதற்கான ஏற்பாடுகளில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் (எஸ்இடிசி)  ஆயத்தமாகி வருகிறது.

போக்குவரத் துறையில் வருவாயைப் பெருக்கும் வகையில், மாதம் முழுவதும் பேருந்துகளில் சரக்குகளை வாடகைக் கட்டண அடிப்படையில் ஏற்றிச் செல்லும் திட்டம் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்திருந்தார். 

அதன்படி, மாநிலம் முழுவதும் இயக்கப்படும் 950 ஸ்லீப்பர், செமி ஸ்லீப்பர், ஏசி அல்லாத மற்றும் ஏசி ஸ்லீப்பர் நீண்ட தூரம் செல்லும் பேருந்துகளில் பயணச்சீட்டு அல்லாத வருவாயை அதிகரிக்க, அரசு விரைவு போக்குவரத்து கழகம் (எஸ்இடிசி) ஆகஸ்ட் 3 முதல் சரக்குகளை கொண்டு செல்ல பேருந்துகளில் சரக்கு பெட்டிகளைப் பயன்படுத்த தயாராகி வருகிறது. 

இதுகுறித்து எஸ்இடிசி அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒவ்வோர் அரசு விரைவு பேருந்தின் (எஸ்இடிசி) சரக்கு பெட்டியின் சுமை திறன் 600 கிலோ என்றும், இட வசதியைப் பொருத்து ஒவ்வொரு பேருந்திலும் 100 முதல் 150 கிலோ வரை சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியும். இந்த சேவையை முதற்கட்டமாக சென்னை-திருச்சி மற்றும் சென்னை-மதுரை தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் அறிமுகமாகும். படிப்படியாக மற்ற வழித்தடங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

"ஆயிரம் கிலோ சரக்குகளை ஏற்றிச் செல்ல விரும்பினால், சரக்குகளை ஒவ்வொன்றும் 100 கிலோ எடையுள்ள 10 பைகளாகப் பிரித்து, பிற பேருந்துகளில் கொண்டு செல்லப்படும். சரக்கு டெலிவரி செய்யப்பட வேண்டிய பேருந்து டெப்போவில் சரக்குகள் இறக்கப்படும்" என்று அவர் கூறினார்.

மேலும்,  சரக்கு பெட்டி நாள்தோறும் மற்றும் மாதாந்திர அடிப்படையில் வாடகைக்கு கிடைக்கும் வகையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வருவதாக கூறினார்.

இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் உணவு தானியங்கள் மற்றும் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் சிறிய அளவிலான தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படுவதாக கூறினார்.

மேலும், இந்த திட்டத்தின்படி, தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் விளைவிக்கும் அல்லது உற்பத்தி செய்யப்படும் பிரசித்தி பெற்ற பொருள்களான திருநெல்வேலி அல்வா, ஊத்துக்குளி வெண்ணெய், தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி நிலக்கடலை மிட்டாய், திண்டுக்கல் சிறுமலை வாழை, நாகா்கோவில் நேந்திரம் சிப்ஸ் உள்ளிட்ட அனைத்து வகை மற்றும் பல பொருள்கள் கொண்டு செல்லலாம் என அதிகாரி தெரிவித்தார்.

மேலும், சேதம் மற்றும் திருட்டு இல்லாமல் போக்குவரத்து வேகமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என்பதால் உற்பத்தியாளரும், நுகர்வோரும் பெருமளவில் பயனடைய முடியும் என தெரிவித்தார். 

இந்த திட்டம் குறித்து உணவு தானிய வியாபாரி எஸ். ராமச்சந்திரன் கூறியதாவது: "தற்போது, ​​தென் தமிழகத்தில் விளைவிக்கும் அல்லது உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் குறிப்பிட்ட நாள்களில் தான் சரக்கு லாரிகளில் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. இதில், சில நேரங்களில் சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக ஓரிரு நாள்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. 

இந்நிலையில், அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்தின் மூலம் நாள்தோறும் இயக்கப்படும் எஸ்இடிசி பேருந்துகள் மூலம், நாள்தோறும் 100 கிலோ முதல் 200 கிலோ வரை சரக்குகளை அனுப்புவது எளிதாக இருக்கும். இது நுகர்வோருக்கும் பெரிதும் பயனளிக்கும்" வகையில்" இருக்கும் என்கிறார் வியாபாரி எஸ். ராமச்சந்திரன்.

இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவது போக்குவரத் துறையா, வியாபாரியா, நுகர்வோரா என்பது திட்டம் செயல்படுத்தப்படும் தன்மையை பொறுத்தே தெரியவரும். அரசின் நல்லத்திட்டதை வாழ்த்துகள் கூறி வரவேற்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com